/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆரணி ஆறு கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆரணி ஆறு கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆரணி ஆறு கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆரணி ஆறு கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆரணி ஆறு கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ADDED : செப் 24, 2025 03:27 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், தினமும் 12,000 - 14,000 கிலோ குப்பை சேகரிக்கப்படும் நிலையில், இவற்றில், 30 சதவீதம் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை வாயிலாக கையாளப்படுகிறது. மற்றவை ஆரணி ஆற்றில் குவிக்கப்படுவதால், தண்ணீர் மாசடைந்து, விவசாயம், மீன்வளம் மற்றும் குடிநீர் என, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில் இருந்து, தினமும் 12,000 -- 14,000 கிலோ குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
நகராட்சிக்கு உட்பட்ட திருவாயற்பாடியில், வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், இங்கு கொண்டு வரப்பட்டு மட்கும், மட்காதவை என, தரம் பிரிக்கப்படுகிறது.
இங்கு, தினமும் 4,000 - 6,000 கிலோ வரை மட்டுமே கையாளப்படுகிறது. மற்றவை, பொன்னேரி ஆரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இவற்றில் அதிகப்படியாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன.
ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, இவை ஆற்றுநீருடன் அடித்து செல்லப்பட்டு ஆலாடு, சிவபுரம், ரெட்டிப்பாளையம், மனோபுரம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் குவிகின்றன. கரையோர கிராமங்களில் ஆற்றுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். கழிவுகளால், ஆற்றுநீர் மாசடைந்து, விவசாயம் பாதிக்கிறது.
ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, மடிமைகண்டிகை உள்ளிட்ட, 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்கழிவுகளால், நிலத்தடி நீரின் தன்மையும் மாறுகிறது.
மேலும், ஆற்றில் தேங்கும் தண்ணீரில் மீன், இறால் உள்ளிட்டவை அதிகளவில் வளரும். இவற்றை பிடித்து, ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டும் உள்ளூர் மீனவர்கள், கழிவுகளால் மீன்வளம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கிறது.
பொன்னேரி நகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பையை முழுமையாக தரம்பிரித்து கையாளாமல், கண்துடைப்பிற்காக ஒரு பகுதியை மட்டும் செயல்படுத்துகிறது.
பெரும்பாலானவை ஆற்றில் கொட்டப்படுவது தொடர்வதால், விவசாயம், குடிநீர், மீன்வளம் என, பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால், கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி வருகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை, ஆரணி ஆற்றில் கொட்டுவதை தடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு பாதிப்பு
ஆற்றில் கொட்டப்படும் குப்பை, மழைக்காலங்களில் மழைநீருடன் அடித்து வரப்பட்டு லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைக்கட்டு பகுதிகளில் குவிகிறது. கழிவுகள் கலந்த தண்ணீரை பருகும் கால்நடைகள், சுகாதார பாதிப்பிற்கு உள்ளாகின்றன. நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பல்வேறு கிராமங்களுடன் இணைந்து, பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட திட்டமிட்டு உள்ளோம். - டி.சுப்பராயலு விவசாயி, அ.ரெட்டிப்பாளையம், பொன்னேரி.