/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிராமப்புற விளையாட்டு மைதானங்களின் நிலை...பரிதாபம் :ரூ.2.92 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பதுக்கல்கிராமப்புற விளையாட்டு மைதானங்களின் நிலை...பரிதாபம் :ரூ.2.92 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பதுக்கல்
கிராமப்புற விளையாட்டு மைதானங்களின் நிலை...பரிதாபம் :ரூ.2.92 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பதுக்கல்
கிராமப்புற விளையாட்டு மைதானங்களின் நிலை...பரிதாபம் :ரூ.2.92 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பதுக்கல்
கிராமப்புற விளையாட்டு மைதானங்களின் நிலை...பரிதாபம் :ரூ.2.92 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பதுக்கல்
ADDED : மே 20, 2025 10:11 PM

திருவாலங்காடு:கிராமங்களில் விளையாட்டு மைதானம் உருப்படியாக இல்லாமல் உள்ளதால், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறைந்துள்ளதாகவும், 2.92 கோடி ரூபாயில், மாவட்டம் முழுதும் வழங்கப்பட்ட விளையாடடு உபகரணங்கள் எங்கு தூங்குகிறதோ என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு திருத்தணி பள்ளிப்பட்டு கடம்பத்தூர் புழல் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம விளையாட்டு மைதானங்கள், மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த திட்டம், சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை. பின், 2020ல், 'அம்மா' விளையாட்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், கிராமம் தோறும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்படுத்தப்பட்டது.
மேலும், விளையாட்டு இளைஞர் நலத்துறை சார்பில், 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுதும், கிராமப்புற மைதானங்களில் உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டது.
தன்னார்வலர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்பட்டு, கபடி, வாலிபால் குழுக்கள், கிராமங்கள் தோறும், உருவாக்கப்பட்டு, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
அதிலிருந்து சிறப்பான வீரர்களை தேர்வு செய்து, மாநில அளவிலான அணிக்கு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் துவங்கிய வேகத்திலேயே முடங்கியது.
தற்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, கடம்பத்தூர், திருத்தணி போன்ற ஒன்றியங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், மைதானங்கள் பயன்பாடு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து பரிதாப நிலையில் உள்ளது.
ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. அதேபோல், கடந்தாண்டு தமிழக அரசு சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகம் முழுதும் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில், 526 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 92 லட்சத்து 85 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை, கடந்தாண்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
அதில் கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான 33 உபகரணங்கள் கொண்ட தொகுப்புகள் இருந்தன. அந்தந்த ஒன்றியங்களில், ஆளுங்கட்சியினரிடம் உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் வாயிலாக ஊராட்சி செயலர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆனால், அந்த உபகரணங்கள் இளைஞர்கள் கைகளுக்கு சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்த உபகரணங்கள் எங்குள்ளது என, இளைஞர் கேள்வி எழுப்பியுள்ளனர்.