Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் ஆலையில்... மீண்டும் உற்பத்தி 2 மாதங்களில் பணி துவங்க வாரியம் திட்டம்

கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் ஆலையில்... மீண்டும் உற்பத்தி 2 மாதங்களில் பணி துவங்க வாரியம் திட்டம்

கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் ஆலையில்... மீண்டும் உற்பத்தி 2 மாதங்களில் பணி துவங்க வாரியம் திட்டம்

கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் ஆலையில்... மீண்டும் உற்பத்தி 2 மாதங்களில் பணி துவங்க வாரியம் திட்டம்

ADDED : ஜூன் 02, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
பொன்னேரி :சென்னை புறநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வந்த மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, தினமும் 10 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், 600 ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

கடந்த 2007ல், அப்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், தற்போது முதல்வராகவும் உள்ள ஸ்டாலின், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2010ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி திட்டத்தை துவக்கி வைத்தார்.

சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, 'சென்னை வாட்டர் டிசாலிஸ்டேஷன் லிமிடெட்' என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது.

சென்னை குடிநீர் வாரியம், மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து, 25 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த குடிநீரையும் வாங்கி கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.

இங்கு, தினமும் 20.37 கோடி லிட்டர் கடல்நீரை உறிஞ்சி, சுத்திகரித்து, 10 கோடி லிட்டர் குடிநீராக மாற்றப்பட்டது.

உற்பத்தி செய்யப்பட்ட குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம் பெற்று குழாய்கள் வழியாக, வடசென்னை பகுதிகளான மணலி, கத்திவாக்கம், எண்ணுார், மாதவரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்தது.

கடந்த 2010 - 2019 வரை, சென்னை வாட்டர் டிசாலிஸ்டேஷன் லிமிடெட் நிறுவனம், தினமும் திட்டமிட்ட அளவிற்கு, கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கி வந்தது.

பின், 2020 - 2022ம் ஆண்டுகளில் சுத்திகரிப்பு ஆலை பராமரிப்பு இல்லாமல், அதன் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. ஐந்து அலகுகளில், தலா 2 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, மூன்று அலகுகள் மட்டுமே செயல்பட்டன.

இதனால், ஆலையின் மொத்த உற்பத்தி, 10 கோடி லிட்டரில் இருந்து, 6 கோடி லிட்டராக குறைந்தது. இயந்திரங்கள், மைக்ரோ பில்டர்கள் பழுது, உதிரிபாகங்கள் செயலிழப்பு ஆகியவற்றால், 2024ல் உற்பத்தி திறன் மேலும் குறைந்து, ஒரே ஒரு அலகில் மட்டும், தினமும் 2 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத நிலையில், அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால், ஆலையின் உற்பத்தி முற்றிலும் பாதித்தது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, சென்னை குடிநீர் வாரியம் ரத்து செய்தது.

குடிநீர் ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஆறு மாதங்களுக்கும் மேலாக திட்டம் முடங்கி கிடக்கிறது.

சென்னை வாட்டர் டிசாலிஸ்டேஷன் லிமிடெட் நிறுவனம், அங்கிருந்து வெளியேறிய நிலையில், அதில் பணிபுரிந்த ஊழியர்கள் மட்டும் சம்பளம் பெறுவதற்காக, தினமும் சுழற்சி முறையில் முகாமிட்டுள்ளனர்.

முடங்கி கிடக்கும் ஆலையை புதுப்பித்து, மீண்டும் உற்பத்தியை துவக்க வேண்டும் என, சென்னை புறநகர்வாசிகள் மற்றும் குடிநீரை பெறுவதற்காக காத்திருக்கும் மீஞ்சூர் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், சட்டசபை மானிய கோரிக்கையின்போது, இந்த குடிநீர் ஆலையில் இருந்து மீஞ்சூர் பகுதிக்கு, தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது திட்டம் முழுமையாக முடங்கியுள்ளது. ஆலையை புதுப்பித்து, மீண்டும் உற்பத்தியை துவக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, சென்னை புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும். மீஞ்சூருக்கும் அறிவித்தபடி குடிநீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை மீண்டும் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டில் இருந்து மூன்று மாதங்களுக்குள் உற்பத்தி துவங்கி, குடிநீர் விநியோகம் நடைபெறும். அதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

குடிநீர் வாரிய அதிகாரி,

சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us