/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம் திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்
திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்
திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்
திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்
ADDED : மே 28, 2025 11:32 PM

திருவாலங்காடு,திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், 1.30 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
இங்கு திருவாலங்காடு, வீரராகவபுரம், சின்னம்மாபேட்டை உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகளான நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக அறுவை சிகிச்சை மையம் இயங்காமல் மூடி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பெற, 20 கி.மீ., தூரத்தில் உள்ள திருவள்ளூர் அல்லது பேரம்பாக்கம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையடுத்து, விரைந்து அறுவை சிகிச்சை மையம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண்கள் வலியுறுத்தினர்.
கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் பிரதான மின்வழித்தடத்தில் இருந்து மின்சாரத்தை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினர். இதையடுத்து, மின் பிரச்னை தீர்ந்ததையடுத்து, நேற்று அறுவை சிகிச்சை மையத்தை திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரகலாதன் திறந்து வைத்தார்.
பின், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.