Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை செல்ல திணறல்

கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை செல்ல திணறல்

கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை செல்ல திணறல்

கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை செல்ல திணறல்

ADDED : ஜன 27, 2024 11:36 PM


Google News
இணைப்பு பஸ் வசதி இல்லாததால் குழப்பம்

சென்னை: கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகளை மாற்றியதால், தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 30,000 ஆக குறைந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வடசென்னை செல்ல போதிய அளவில் நேரடி இணைப்பு பேருந்து வசதி இல்லாததால், தொடர்ந்து பயணியர் அவதிப்படுகின்றனர்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2002ல் திறக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 250 பேருந்துகளையும், ஒரு நாளைக்கு 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், இங்கிருந்து இயக்கும் வகையில் இருந்தது.

பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றும்போது, பயணியர் பெரிய அளவில் அதிருப்தியடையவில்லை.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்பேடில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள், கடந்த டிச., 30 முதல் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்பட்டன. பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்களும், விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை திரும்பியோரும் கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்டதால், அதிருப்தி அடைந்தனர். சென்னையில் செல்ல வேண்டிய இடங்களுக்கு போதிய இணைப்பு பேருந்து வசதி கிடைக்காமல் அவதியடைந்தனர். புறநகர் ரயில்களில் வந்து சேர, நெடுநேரமானது.

அதைத்தொடர்ந்து, கடந்த 24ம் தேதி இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றியபோது கடும் குழப்பம் அரங்கேறியது. கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லாததையும், முடிச்சூரில் பேருந்து நிறுத்துவதற்கான பணிகள் முடியாததாலும், தொடர்ந்து கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்தனர். ஆனால், இரவு 7:00 மணிக்கு கோயம்பேடில் ஆம்னி பேருந்து நிலைய வளாகம் மூடப்பட்டு, அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், அவற்றில் முன்பதிவு செய்தவர்கள் உரிய தகவல் பரிமாற்றம் இல்லாததால், கடும் குழப்பமடைந்தனர்.

பெரும்பாலானோர், கிளாம்பாக்கம் சென்று ஆம்னி பேருந்துகளில் பயணித்தனர். சிலர் பயணத்தை ரத்து செய்தனர்.

இந்நிலையில், குடியரசு தினம், தைப்பூசம் திருவிழா மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால், வெளியூர் சென்றோர் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, விடுமுறை முடியவுள்ள ஒருநாள் முன்னதாகவே நேற்று முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

அவர்கள் பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக, ஜி.எஸ்.டி., சாலையிலே இறங்கினர். அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று, மின்சார ரயில்களில் மற்ற பகுதிகளுக்கு பயணம் செய்தனர்.

பெரும்பாலானோர் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர இணைப்பு பேருந்துகளில் பயணம் செய்தனர்.

ஆனால், திருவொற்றியூர், எண்ணுார், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மணலி வடசென்னை பகுதிகளுக்கு நேரடியாக, மாநகர இணைப்பு பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால், பயணியர் அவதிப்பட்டனர்.

வேறுவழியின்றி, இரண்டு மாநகர பேருந்துகள் மாறி மாறி சென்றனர். சிலர், கால் டாக்சி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பயணியர் சிலர் கூறியதாவது:

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறந்ததில் இருந்தே, பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால், பயணியர் மத்தியில், இந்நிலையத்தை பயன்படுத்துவதில் தயக்கம் ஏற்படுகிறது. சீரான இணைப்பு பேருந்து வசதி இல்லை. வடசென்னைக்கு 55 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவையை விரைந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை 50 சதவீத பேருந்துகளை கோயம்பேடில் இருந்து இயக்கினால், பயணியர் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 503 சாதாரண கட்டண பேருந்து நடைகள், 1,065 சொகுசு பேருந்து நடைகள், 91 விரைவு கட்டண பேருந்து நடைகள், 32 'ஏசி' பேருந்து நடைகள் என, 37 வழித்தடங்களில் 1,691 பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்துக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு இடைநில்லா பேருந்து, சிறுசேரியில் இருந்து கூடுதல் பேருந்து சேவையும் துவங்கப்பட்டுள்ளது. வடசென்னையின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆம்னி பஸ் நிறுத்துமிடம்

20 ஏக்கரில் கட்ட வேண்டும்அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில், 250 பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க, பேருந்து நிலையத்திலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.முடிச்சூர் வரதராஜபுரத்தில், 5 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைப்பது போதாது. அடுத்த 10 ஆண்டுகள் தேவையை கருத்தில் கொண்டு, 20 ஏக்கரில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக அமைத்துள்ள குழுவில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் இரண்டு பேரையும் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



பயணியர் எண்ணிக்கை

தினம் 30,000 குறைவுகோயம்பேடில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் தினம் 1.45 லட்சம் பேர் பயணிப்பர். ஆனால், கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட்ட பின், பயணியர் எண்ணிக்கை 1.15 லட்சமாக குறைந்துள்ளது.ஒவ்வொரு முறையும், பேருந்து நிலையம் மாற்றத்தின்போது, இந்த மாற்றம் இருக்கும். தற்காலிகமாக ரயில்களிலும், சொந்த வாகனங்களிலும் பயணத்திற்கு மாறி உள்ளனர். இது, அடுத்த சில மாதங்களில் மாறிவிடும்.- அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us