/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணியில் பக்கவாட்டு பகுதி சேதம் திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணியில் பக்கவாட்டு பகுதி சேதம்
திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணியில் பக்கவாட்டு பகுதி சேதம்
திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணியில் பக்கவாட்டு பகுதி சேதம்
திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணியில் பக்கவாட்டு பகுதி சேதம்
ADDED : செப் 01, 2025 01:34 AM

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் வரை 364 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற இணைப்பு பணி, தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது. சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடும் நெரிசல்
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி வரை இணைப்பு பணி, ஒன்பது ஆண்டுகளாக முடங்கியது.
இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகரின் வழியாக செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 2022 ஆகஸ்ட்டில் துவங்கியது. திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக, பாலம் அமையவுள்ள இடங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியதால், பணியில் தொய்வு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட, திருநின்றவூர் வரை ஏரிகள் மற்றும் சாலைகள் குறுக்கிடும் இடம் என, ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 10 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது.
சாலை அமைக்கப்பட்டு, முக்கிய ஊர்களை இணைக்கும் இடங்களில், 'சர்வீஸ்' சாலையும் அமைக்கப்பட்டு, வழிகாட்டி பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பேட்ச் ஒர்க்
இருப்பினும், இச்சாலை பணி தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, பல இடங்களில் தார் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை, அவ்வப்போது 'பேட்ச் ஒர்க்' போட்டு சமாளித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், சாலையின் பல்வேறு இடங்களில், தார் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட பக்கவாட்டு சுவர்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மண் அப்படியே உள்வாங்கியதால் பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகிலும், தலக்காஞ்சேரி, ஈக்காடு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேம்பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் மண் உள்வாங்கியுள்ளது.
இதை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் செப்.,க்குள் நிறைவு பெற்று, அதே மாதம் திறப்பு விழா காணும் வகையில், ஒப்பந்ததாரர்கள் பணியை செய்து வருகின்றனர்.
கேள்விக்குறி
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது. பணி துவங்கி மூன்று ஆண்டுகளாகியும், ஆமை வேகத்தில் நடந்த பணி, தற்போது அவசர அவசரமாக நடந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து, 'பேட்ச் ஒர்க்' நடத்தி சமாளித்த நிலையில், தற்போது பெய்த மழையால் சாலையின் தரம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
குறிப்பாக, மேம்பாலம் அமைந்துள்ள 17 இடங்களிலும் சாலைக்கும், தடுப்புச்சுவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, அவசர கதியில் பாலம் திறப்பதை விட்டு விட்டு, தரமாக அமைத்து, முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரச்சான்று பெற்ற பின்னரே, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.