/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரூ.2.61 கோடி கூடுதல் நிதி அரசிடம் கேட்டு...காத்திருப்பு!:கொசஸ்தலை மேம்பால பணி இழுபறிரூ.2.61 கோடி கூடுதல் நிதி அரசிடம் கேட்டு...காத்திருப்பு!:கொசஸ்தலை மேம்பால பணி இழுபறி
ரூ.2.61 கோடி கூடுதல் நிதி அரசிடம் கேட்டு...காத்திருப்பு!:கொசஸ்தலை மேம்பால பணி இழுபறி
ரூ.2.61 கோடி கூடுதல் நிதி அரசிடம் கேட்டு...காத்திருப்பு!:கொசஸ்தலை மேம்பால பணி இழுபறி
ரூ.2.61 கோடி கூடுதல் நிதி அரசிடம் கேட்டு...காத்திருப்பு!:கொசஸ்தலை மேம்பால பணி இழுபறி
ADDED : ஜூன் 22, 2024 12:07 AM

திருவள்ளூர்:விடையூர்-கலியனுார் இடையில் கொசஸ்தலை ஆற்றில் முழுமை பெறாத பாலத்தை கட்டி முடிக்க, அரசிடம் 2.61 கோடி ரூபாய் கேட்டு, ஓராண்டாக மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கலியனுார் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சுற்றிலும், 15 கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமத்திற்கும், கடம்பத்துார் ஒன்றியம், விடையூருக்கும் குறுக்கே, கொசஸ்தலை ஆறு ஓடுகிறது.
கலியனுார், நெமிலி அகரம், குப்பம் கண்டிகை, மணவூர், ராஜபத்மாபுரம் உட்பட, 15 கிராமங்களைச் சேர்ந்தோர், அத்தியாவசிய பணிக்காக, தற்காலிக பாதை அமைத்து கொசஸ்தலை ஆற்றைக் கடந்து விடையூர் வருகின்றனர்.
மழை காலத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, பெண்கள், பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்ட கிராமவாசிகள் எவரும் ஆற்றை கடக்க முடியாமல், திருவாலங்காடு, நாராயணபுரம் வழியாக, 25 கி.மீட்டர் துாரம் பயணித்து திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
கிராமவாசிகளின் வசதிக்காக, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், 3.60 கோடி ரூபாய் செலவில், 2017-18ல் 144 மீட்டர் நீளம், 8.6 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், மேம்பாலம் இரண்டு கரையையும் இணைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கடந்த, ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால், பொதுமக்கள், வழக்கம் போல், திருவாலங்காடு, நாராயணபுரம் சென்று திருவள்ளூர் சென்றனர்.
இதனால், பள்ளி மாணவ - மாணவியர், விடையூர் வர 20 கி.மீட்டர் துாரம் செல்ல வேண்டும்; இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, தண்ணீரில் நடந்து சென்று, பின் ஏணியை பயன்படுத்தி பாதியில் நிற்கும் மேம்பாலத்தில் ஏறி, பள்ளி சென்றனர்.
இந்த ஆண்டு, மழை காலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட நேரிடும். எனவே, பள்ளி மாணவ - மாணவியர் நலன் கருதி, பாதியில் நிற்கும் விடையூர் - கலியனுார்மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடையூர் - கலியனுார் மேம்பாலம் 'நபார்டு' திட்டத்தில் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தை முழுதும் பூர்த்தி செய்ய, கூடுதலாக, 2.61 கோடி ரூபாய் தேவை என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் நிதி ஆதாரம் இல்லை. எனவே, ஒருங்கிணைந்த ஊரக ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் திட்டத்தில், 2.61 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும், கிடப்பில் உள்ளது. இதுவரை அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், பாலம் நிறைவு பெறாத நிலை உள்ளது.
-சுலோசனா மோகன்ராவ்,
ஒன்றிய கவுன்சிலர், பாண்டூர்.