/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம் கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டுகோள் சோழவரம் கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
சோழவரம் கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
சோழவரம் கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
சோழவரம் கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 30, 2025 02:10 AM

சோழவரம்:சோழவரத்தில் பராமரிப்பில்லாத கவரைக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சோழவரம் காவல் நிலையம் பின்புறம் கவரைக்குளம் அமைந்து உள்ளது.
நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இந்த குளத்தின் அருகில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து சோழவரம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. 2019ல், 15லட்சம் ரூபாயில் இந்த குளத்தின் சரிவுப்பகுதியில், கான்கிரீட் சுவர், குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி செல்பவர்களுக்காக நடைபாதை, படித்துறைகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
மேற்கண்ட பணிகள் சரிவர மேற்கொள்ளாத நிலையில், தற்போது குளத்தை சுற்றிலும் கரைப்பகுதிகள் சேதம் அடைந்து உள்ளன.
நடை பயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளங்கள் சிதைந்து உள்ளன.
இதனால் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபடும் பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குளத்தின் கரைகளை சீரமைக்கவும், நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக நடைபாதைகளை புதுப்பித்து, இருக்கை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை அங்கு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.