/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டையில் பொங்கல் பானை விற்பனை 'ஜோர்'கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டையில் பொங்கல் பானை விற்பனை 'ஜோர்'
கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டையில் பொங்கல் பானை விற்பனை 'ஜோர்'
கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டையில் பொங்கல் பானை விற்பனை 'ஜோர்'
கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டையில் பொங்கல் பானை விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 11, 2024 10:29 PM

ஆர்.கே.பேட்டை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம், புதுார் மேடு, சிங்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மண் பானை தயாரிப்பு மற்றும் விற்பனை களைகட்டி வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது, பாரம்பரியமாக மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.
வீடுகளில் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்களிலும், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் விடுமுறைக்கு முன்னதாக ஊழியர்கள், மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில், மண் பானை பிரதான இடம் பிடிக்கிறது. இதனால், பானை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம், ராஜாநகரம், புதுார் மேடு உள்ளிட்ட பகுதிகளில் பானை தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி தயாரிக்கப்படும் பானைகள், வாரசந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியில் பானைகள் விற்பனைக்காக அதிகளவில் தயாராகி வருகின்றன. கனகம்மாசத்திரத்தில் தயாராகும் மண் பாண்டங்கள் உறுதியாகவும், நேர்த்தியாகவும் தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடுவர். அப்போது வீட்டு வாசல் மற்றும் மாட்டுத்தொழுவில் வைத்து விவசாயிகள் பாரம்பரியமாக மண் அடுப்புகளில் மண் பானைகளை வைத்து பொங்கல் கொண்டாடுவர்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சின்னதுரை, 57, கூறியதாவது:
பொங்கலுக்கு ஓரிரு நாட்களே இருப்பதால் அதற்காக மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், அடுப்புகள், பாத்திரங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. சாதாரண மண் பானை 50 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை, அளவிற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
வண்ணமயமான ஓவியம், கோலம் வரைந்த ஸ்பெஷல் பொங்கல் பானை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கான மண்பாண்டங்கள் தயாரிப்பு 10 நாட்களில் சூடு பிடிக்க துவங்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, திப்பன்பாளையம் கிராமத்தில், பொங்கல் பானைகள் மற்றும் மண் சட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து செல்வம் என்பவர் கூறுகையில் 'எங்களுடைய சிரமத்திற்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் கண்ட போதும், பானைகளின் விலையை ஏற்ற முடியாத நிலை தொடர்கிறது' என்றார்.