Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோதனைச்சாவடி கடைகளுக்கு வந்த 'சோதனை' அரசியல் தலையீடுகளால் ஏலம் விடுவதில் சிக்கல்

சோதனைச்சாவடி கடைகளுக்கு வந்த 'சோதனை' அரசியல் தலையீடுகளால் ஏலம் விடுவதில் சிக்கல்

சோதனைச்சாவடி கடைகளுக்கு வந்த 'சோதனை' அரசியல் தலையீடுகளால் ஏலம் விடுவதில் சிக்கல்

சோதனைச்சாவடி கடைகளுக்கு வந்த 'சோதனை' அரசியல் தலையீடுகளால் ஏலம் விடுவதில் சிக்கல்

ADDED : ஜூன் 14, 2025 09:01 PM


Google News
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், 2018 ஜூன் மாதம், அ.தி.மு.க., ஆட்சியில், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன.

ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் ஒன்று, தமிழகம் செல்லும் மார்க்கத்தில் ஒன்று என, இரு சோதனைச்சாடிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

அதில், நகலகம், உணவகம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக தலா ஐந்து கடைகள் என, மொத்தம் 10 கடைகள் கட்டப்பட்டன.

சோதனைச்சாவடி திறந்த ஆண்டே, கடைகளுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏலம் எடுப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மறுதேதி அறிவிக்கப்படாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின், 2022 தி.மு.க., ஆட்சியில், ஆகஸ்ட் மாதம் பொது ஏலம் நடைபெற்றது. அப்போதும், கடைகளை பிரிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஏலம் ரத்து செய்யப்பட்டது.

அரசியல் தலையீடுகள் காரணமாக, ஆறரை ஆண்டுகளாக, 10 கடைகளையும் திறக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

இந்த சோதனைச்சாவடிகளில், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளை நிறுத்தி, ஆவண தணிக்கை செய்யப்படுகிறது. பல மணி நேரம் லாரிகள் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதன் ஓட்டுனர்கள் நகல் எடுப்பதற்கும், காத்திருக்கும் நேரத்தில் உணவு மற்றும் தேநீர் அருந்த, 3 கி.மீ., தொலைவில் உள்ள எளாவூர் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

சோதனைச்சாவடி வளாகத்தில் கடைகள் இருந்தும், அவை திறக்கப்படாத நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள், மற்றொரு வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு எளாவூர் பஜார் பகுதிக்கு சென்று வருவதால் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

சோதனைச்சாவடி திறந்து ஏழு ஆண்டுகளாகியும், அரசியல் கட்சியினர் தலையீடுளால் கடைகள் திறக்கப்படாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது என, வாகன ஓட்டிகளும், உள்ளூர்வாசிகளும் புலம்புகின்றனர்.

அரசியல் தலையீடுகளால் மீண்டும் பொது ஏலம் நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால், கடைகள் ஏலம் விடும் பொறுப்பை போக்குவரத்து துறையினருக்கு மாற்றும் எண்ணத்தில் உள்ளோம்.

- பொதுப்பணித் துறை அதிகாரி,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us