Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பதில்..சிக்கல்!:மின் இணைப்புக்கு 'டிபாசிட்' கட்டுவதில் இழுபறி

அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பதில்..சிக்கல்!:மின் இணைப்புக்கு 'டிபாசிட்' கட்டுவதில் இழுபறி

அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பதில்..சிக்கல்!:மின் இணைப்புக்கு 'டிபாசிட்' கட்டுவதில் இழுபறி

அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பதில்..சிக்கல்!:மின் இணைப்புக்கு 'டிபாசிட்' கட்டுவதில் இழுபறி

ADDED : ஜூன் 29, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டியுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு, மின் இணைப்பு பெறுவதற்கு முன்தொகை செலுத்துவதில், ஊரக வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறையினர் இடையே போட்டி நிலவி வருவதால், திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் மொத்தம் 526 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மொத்தம் 1,760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில், 2 வயது முதல், 5 வயது உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையங்களுக்கான கட்டட வசதி, ஒன்றிய நிர்வாகம் மூலம் ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாமலும், பழுதடைந்த கட்டடத்திலும், கோவில் வளாகம் மற்றும் வாடகை வீடுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு முதல் தற்போது வரை மாவட்டத்தில், 150 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தலா, 11.78 லட்சம் ரூபாய், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 - 22 மற்றும் 2022 - -23ம் ஆண்டு மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தற்போது 90 அங்கன்வாடி மையங்கள் கட்டி முடிக்கப்பட்டும், மின் இணைப்பு வழங்கப்படாததால் திறப்பு விழா காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, திருத்தணி ஒன்றியத்தில் 19 அங்கன்வாடி மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், சூர்ய நகரம், தெக்களூர், இஸ்லாம் நகர் மற்றும் கார்த்திகேயபுரம் மோட்டூர் உட்பட 10 கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டி முடித்துள்ள அங்கன்வாடி மையங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளன.

காரணம், மின் இணைப்பு வழங்கப்படாததால் திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால், குழந்தைகள் ஊராட்சி சேவை மையம், கோவில் வளாகம் மற்றும் வாடகை வீடுகளில் இயங்கி வருகிறது.

மின் இணைப்பு பெறுவதற்கு, முன்வைப்புத் தொகை செலுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டி தருவது மற்றும் மின் இணைப்புக்கான ஒயர்கள் மட்டும் மின்கம்பம் வரை கொண்டு செல்ல வேண்டியது, ஊராட்சி நிர்வாகம் அல்லது ஒப்பந்தாரர் பொறுப்பாகும்.

மின் இணைப்புக்கு மின் வாரிய அலுவலகத்தில் முன்பணம் செலுத்துவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மின் இணைப்புக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

அங்கன்வாடி மையங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் இணைப்பு வாங்கிக் கொடுக்கும் போது, மாதந்தோறும் வரும் மின் கட்டணமும் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டியுள்ளது.

கட்டடம் உபயோகப்படுத்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துறையினர், மின் கட்டணத்தை ஏற்பதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால், செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை. அவர்கள் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தணி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:

புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல் மற்றும் மின் இணைப்பு பெற்று எங்களிடம் ஒப்படைப்பது தான் இதுவரை நடைமுறையாக உள்ளது. தற்போது மின் இணைப்பை நாங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது புதிதாக உள்ளது.

மின் இணைப்புக்கு முன்பணம் கட்டுவதற்கு எங்களுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us