Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூருடன் இணையும் ஒன்பது ஊராட்சிகள்...புது எல்லை:அரசின் ஒப்புதலுக்கு மாதிரி வரைபடம் தயார்

திருவள்ளூருடன் இணையும் ஒன்பது ஊராட்சிகள்...புது எல்லை:அரசின் ஒப்புதலுக்கு மாதிரி வரைபடம் தயார்

திருவள்ளூருடன் இணையும் ஒன்பது ஊராட்சிகள்...புது எல்லை:அரசின் ஒப்புதலுக்கு மாதிரி வரைபடம் தயார்

திருவள்ளூருடன் இணையும் ஒன்பது ஊராட்சிகள்...புது எல்லை:அரசின் ஒப்புதலுக்கு மாதிரி வரைபடம் தயார்

ADDED : மார் 26, 2025 08:27 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியுடன், அருகில் உள்ள ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், புதிதாக உருவாக உள்ள எல்லைகளின் உத்தேச மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்பட்டியல், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அரசின் இறுதி உத்தரவுக்கு பின், நகராட்சியின் புதிய எல்லை இறுதி வடிவம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் நகராட்சி 10.65 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம் 27 வார்டுகள் கொண்ட இந்நகராட்சியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 55,722 பேர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரத்தை மேம்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நகராட்சிக்கு போதிய நிதியாதாரம் இல்லை.

சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள், தொழில் வரி மற்றும் கட்டட உரிம கட்டணங்கள் ஆகியவை வாயிலாக, ஆண்டுக்கு 8.50 கோடி ரூபாய் அளவிற்கே நகராட்சியின் நிதியாதாரமாக உள்ளது.

எனவே, நகராட்சியை விரிவுபடுத்தும் வகையில், அருகில் உள்ள காக்களூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், திருப்பாச்சூர், ஈக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, 2012 முதல் நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு, வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சியில், சிறுவானுார், சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, புட்லுார், திருப்பாச்சூர் - பகுதி, வெங்கத்துார், மேல்நல்லாத்துார் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக, கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளின் எல்லை, மக்கள் தொகை உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உத்தரவிட்டது.

நகராட்சி வருவாய் அலுவலர்கள், இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு, முதல் கட்டமாக சேர்க்கப்பட வேண்டிய ஊராட்சி எல்லைகளுடன் கூடிய மாதிரி வரைபடம் தயாரித்து உள்ளனர். அந்த வரைபடத்தில், திருவள்ளூர் நகராட்சியுடன், ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படும் பகுதியை தனி அடையாளம் காட்டி உள்ளனர்.

அந்த மாதிரி வரைபடம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நகராட்சியுடன் இணைந்தால் நுாறு நாள் வேலை, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவை அதிகரிக்கும் என, ஊராட்சி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கலெக்டருக்கும், தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியதையடுத்து, 'நகராட்சி எல்லை விரிவாக்கம், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சியுடன் காக்களூர் மற்றும் ஈக்காடு ஊராட்சியை இணைக்காமல், தனி பேரூராட்சியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:

திருவள்ளூர் நகராட்சியுடன், ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டால், நகர வசதிகள் அனைத்தும் அந்த பகுதிகளுக்கு கிடைக்கும். சுத்தமான குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், நகரத்தில் கிடைப்பது போன்று ஊராட்சி மக்களுக்கு கிடைக்கும்.

இதனால், திருவள்ளூர் நகரமும் வளர்ச்சியடையும். மேலும், அரசின் அதிகாரபூர்வ உத்தரவு வந்ததும், புதிதாக இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளில், வார்டுகள் வரையறை செய்யப்பட்ட பின், நகராட்சியின் வார்டு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது, திருவள்ளூர் நகராட்சியில், 56,074 பேர் வசித்து வருகின்றனர். கூடுதலாக, ஒன்பது ஊராட்சிகள் இணையும் பட்சத்தில், திருவள்ளூரின் மக்கள் தொகை, 1,28,069 ஆக உயரும். நகராட்சியின் பரப்பளவு, 51.02 ச.கி.மீ.,ராக அதிகரிக்கும்.

திருவள்ளூருடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள்

ஊராட்சி மக்கள் தொகைசேலை 3,405காக்களூர் 14,528ஈக்காடு 8,435தலக்காஞ்சேரி 907புட்லுார் 6,097திருப்பாச்சூர் - பகுதி 8,886வெங்கத்துார் 23,292மேல்நல்லாத்துார் 4,160சிறுவானுார் 2,285மொத்தம் 71,995



காக்களூர் இணையுமா?


திருவள்ளூர் நகராட்சிக்கு மிக நெருக்கமாக காக்களூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ஆஞ்சநேயர்புரம், அப்பாசாமி சாலை உள்ளிட்ட பகுதிகள், நகராட்சிக்கு அருகில் அமைந்துள்ளதால், அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்து உள்ளன. மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலர்கள், அப்பகுதியில் தான் அமைந்துள்ளனர். தொழிற்பேட்டையும் அந்த ஊராட்சியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் நகராட்சியுடன் இணைய, அந்த ஊராட்சிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அந்த ஊராட்சி இணையுமா அல்லது தனியாக செயல்படுமா என்பதை, நகராட்சி நிர்வாக துறையினர் முடிவு செய்ய உள்ளனர் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us