/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்
கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்
கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்
கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்
ADDED : பிப் 11, 2024 11:26 PM

சென்னை அடுத்த நெம்மேலியில், 1,516 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலை, வரும் 16ம் தேதிக்குள், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆலையில், தென்சென்னை பகுதிகளில் 9 லட்சம் பேருக்கு குடிநீர் வினியோகிக்க முடியும் என, அதிகாரிகள் கூறினர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், குழாய் மற்றும் லாரி வழியாக குடிநீர் வினியோகம் செய்ய, சென்னை குடிநீர் வாரியத்திற்கு தினமும், 110 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது, 100 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
நெம்மேலி- - 1 கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நெம்மேலி- - 2 திட்டத்தில், 1,516.82 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 2019ல் துவங்கியது. கடல்நீர் செல்லும் வகையில் குழாய், உவர் நீரை வெளியேற்றும் குழாய், கடலில் பதிக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லுாரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம் மற்றும் 48 கி.மீ., துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டது. இந்த பணி, கடந்தாண்டு மே மாதம் முடிந்தது.
மின் இணைப்பு வழங்குவதில் தாமதம், சாலை சந்திப்புகளில் குழாய் இணைப்பு போன்ற பணிகள் இருந்ததால், சோதனை ஓட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, நான்கு மாதங்களுக்கு முன் சோதனை ஓட்டம் துவங்கியது. இந்த பணி முடிந்ததையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. வரும் 16ம் தேதிக்குள், முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார். திறப்பு விழாவிற்காக, மேடை அமைக்கும் பணி நடக்கிறது.
பற்றாக்குறை இல்லை
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
நெம்மேலி- - 2 திட்டத்தால், சோழிங்கநல்லுார், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்துார், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய 12 இடங்களைச் சேர்ந்த 9 லட்சம் பேர் பயன் அடைவர்.
பேரூரில் பணி துவங்கிய, 40 கோடி லிட்டர் ஆலை பயன்பாட்டிற்கு வந்தால், கடல்நீரை சுத்திகரித்து 70 லட்சம் குடிநீர் பெற முடியும். இதன் வாயிலாக, கோடையில் ஏரிகளில் தண்ணீர் வற்றினாலும், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -