/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பழவேற்காடில் ஜல்ஜீவன் திட்டப்பணி அரைகுறை...ரூ.85 லட்சம் வீண்!:குடிநீர் தட்டுப்பாடால் மீனவ கிராமங்கள் தவிப்புபழவேற்காடில் ஜல்ஜீவன் திட்டப்பணி அரைகுறை...ரூ.85 லட்சம் வீண்!:குடிநீர் தட்டுப்பாடால் மீனவ கிராமங்கள் தவிப்பு
பழவேற்காடில் ஜல்ஜீவன் திட்டப்பணி அரைகுறை...ரூ.85 லட்சம் வீண்!:குடிநீர் தட்டுப்பாடால் மீனவ கிராமங்கள் தவிப்பு
பழவேற்காடில் ஜல்ஜீவன் திட்டப்பணி அரைகுறை...ரூ.85 லட்சம் வீண்!:குடிநீர் தட்டுப்பாடால் மீனவ கிராமங்கள் தவிப்பு
பழவேற்காடில் ஜல்ஜீவன் திட்டப்பணி அரைகுறை...ரூ.85 லட்சம் வீண்!:குடிநீர் தட்டுப்பாடால் மீனவ கிராமங்கள் தவிப்பு
ADDED : ஆக 02, 2024 03:02 AM

பழவேற்காடு:பழவேற்காடில், ஜல்ஜீவன் திட்ட பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், குடிநீர் தட்டுப்பாட்டில் மீனவ கிராமங்கள் தவித்து வருவதுடன், திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, 85.44 லட்சம் ரூபாய் வீணாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒனறியம், பழவேற்காடு ஊராட்சியில், 14 மீனவ கிராமங்களில், 3,250 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், 9,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
பழவேற்காடு மீனவப்பகுதியில் நிலத்தடிநீர் உவர்ப்பாக இருப்பதால், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை, குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியாது.
இதற்காக, 12கி.மீ., தொலைவில், பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பைப்லைன் முழுதும் சேதம் அடைந்து, குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை.
குடிநீர் தட்டுப்பாடால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியதை தொடர்ந்து, கடந்த, 2021 -22 நிதியாண்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் வாயிலாக, 85.44 லட்சம் நிதியில் புதிய குழாய்கள், மேல்நிலைத்தொட்டி, உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, இஸ்ரவேல் குப்பம், ஜெ.ஜெ.நகர், குளத்துமேடு, ராஜரத்தினம் நகர், பசியாவரம், இடமணிகாலனி, கலைஞர் நகர் ஆகிய கிராமங்களில், புதிய குழாய் பதிப்பு பணிகளும், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி குழாய்களும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 3,300 மீ., தொலைவிற்கு புதிய பைப்லைன்களும், 926 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பிற்கான தனிநபர் குழாய்களும் பொருத்தப்பட்டன.
ராஜரத்தினம் நகர், குளத்துமேடு கிராமங்களில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டன.
மேற்கண்ட திட்டத்தின் கீழ், 75சதவீத பணிகள் முடிந்த நிலையில், மீதம் உள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டன. குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளுக்கு வர்ணம் பூசுவது, அதில் பைப்லைன் பொருத்தி தண்ணீர் ஏற்றி பரிசோதிப்பது, வீடுகளுக்கு புதிய குழாய்கள் வாயிலாக குடிநீர் வழங்குவது என மற்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இரண்டு ஆண்டுகளாக திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளன. திட்டப்பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என ஊராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும் பயனின்றி கிடக்கிறது. ஜல்ஜீவன் திட்டப்பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டு திட்டம் முடங்கி கிடப்பதால், மீனவ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.
ஜல்ஜீவன் திட்டமானது கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான உத்தரவாதம் அளிப்பதாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் தனிநபர் குழாய் இணைப்புகள் வாயிலாக அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான மற்றும் தேவையான அளவிற்கு குடிநீர் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்க இந்த திட்டம் வழிவகுக்கும் நிலையில், பழவேற்காடு ஊராட்சியில் திட்டம் செயல்பாட்டிற்கு வராமலேயே முடங்கி கிடப்பது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
புதிய பைப்லைன்கள் பொருத்தியும் பயனுக்கு வராத நிலையில், சேதமான பழைய பைப்லைன்களில் கசிவுகளில் வீணாவது போக குறைந்த அளவே குடியிருப்பு பகுதிகளுக்கு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறோம். டிராக்டர்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும், குடிநீரை, ஒரு குடம், 5 -7 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது.
ஜல்ஜீவன் திட்டம் முடங்கி கிடப்பதுடன், கடந்த, 2021ல், பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜரத்தினம் நகரில், ஆதி திராவிடர் நலமேம்பாட்டு திட்டம், 9.50 லட்சம் ரூபாயில், தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி ஒன்று கட்டப்பட்டு, இதுவரை அதற்கு தண்ணீர் கொண்டு வரவில்லை.
குடிநீர் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் பல லட்சம் நிதி ஒதுக்கியும், பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாமல் உள்ளன.
அதிகாரிகளும் எங்களின் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி ஜல்ஜீவன் திட்டப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.