ADDED : ஜன 24, 2024 11:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம், 2015ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இருப்பினும், திட்ட வழிமுறைகளில் இருந்த இடர்பாடு காரணமாக, தமிழகத்தில் யாரும் ஜவுளி பூங்கா அமைக்க முன்வரவில்லை.
இதையடுத்து, சிறு மற்றும் நடுத்தர ஜவுளி தொழில்முனைவோர், ஜவுளி பூங்காக்கள் அமைக்க, வழிமுறை எளிதாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் மூன்று உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும்.
இதற்கென உட்கட்டமைப்பு வசதி மற்றும் தொழிற்சாலை கட்டடம் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் (அதிகபட்சமாக 2.50 கோடி ரூபாய்) வரை மானியமாக வழங்கப்படும். தற்போது, தமிழகத்தில் ஆறு சிறிய ஜவுளிப் பூங்காக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இங்கு, 120 பேருக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி, அதிகளவிலான பூங்காக்கள் அமைக்க முன்வர வேண்டும்.
இத்திட்டம் தொடர்பாக, மண்டல துணை இயக்குனர், துணி நுால் துறை, சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம்- - 636 006, தொலைபேசி எண்: 0427 - 2913 006 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.