/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கொசஸ்தலையாற்றில் உயர்மட்டப்பாலம்...இழுபறி!:40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதிகொசஸ்தலையாற்றில் உயர்மட்டப்பாலம்...இழுபறி!:40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி
கொசஸ்தலையாற்றில் உயர்மட்டப்பாலம்...இழுபறி!:40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி
கொசஸ்தலையாற்றில் உயர்மட்டப்பாலம்...இழுபறி!:40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி
கொசஸ்தலையாற்றில் உயர்மட்டப்பாலம்...இழுபறி!:40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி
ADDED : ஜூலை 07, 2024 01:17 AM

திருவாலங்காடு:கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், எல்.வி.புரம், குப்பம் கண்டிகை கிராமங்களில் தரைப்பாலங்கள் உடைவதும், அதிகாரிகள் தற்காலிகமாக தீர்வு காண்பதும், தொடர் கதையாகிறது. உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் துவங்கும் கொசஸ்தலையாறு, எண்ணுார் அருகே கடலில் கலக்கிறது. திருவாலங்காடு ஒன்றியத்தில் ஒரத்துாரில் துவங்கி, கூடல்வாடி வரை 10 கி.மீ., துாரம் பாய்கிறது.
குப்பம் கண்டிகை மற்றும் எல்.வி.புரம் கிராமத்தில் செல்லும் கொசஸ்தலையாற்றின் குறுக்கே மக்கள், வாகன போக்குவரத்திற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தரைப்பாலம், 2005, 2015, 2017, 2019, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அடித்து செல்லப்பட்டது.
ஒவ்வொரு முறையும், சேதமடைந்த தரைப்பாலத்தில் மணல் மூட்டைகள் வைத்து, தற்காலிக சீரமைப்பு பணியை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழு முறை தரைப்பாலம் சேதமடைந்தும், தற்காலிகமாக மட்டுமே அவை சீரமைக்கப்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்தாண்டு பருவமழையின்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், குப்பம் கண்டிகை, எல்.வி.புரம் கிராமங்களில் தற்காலிக பாலம் சேதம் அடைந்து, தீவுகளாக மாறும் அபாயம் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 2022ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, ஆய்வு செய்த அதிகாரிகள் உயர்மட்ட பாலம் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எல்.வி.புரம் மக்கள் கூறியதாவது:
கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தால், 30 நாட்களாக அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல், தீவில் சிக்கியதை போன்று வீட்டிற்குள்ளே முடங்கினோம்.
பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். முதியோர், கர்ப்பிணியர், மருத்துவமனை செல்ல 5 கி.மீ., சுற்றி நடந்தனர்.
இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குப்பம் கண்டிகை மக்கள் கூறியதாவது:
மணவூர், சின்னம்மாபேட்டை, குப்பம் கண்டிகை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலைக்கு குப்பம் கண்டிகை தரைப்பாலத்தை கடந்து திருவள்ளூர், பேரம்பாக்கம், கடம்பத்துார் செல்கின்றனர்.
இந்த தரைப்பாலம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மூழ்குவதாலும், அடித்து செல்லப்படுவதாலும், 8 -- - 10 கி.மீ., சுற்றி திருவாலங்காடு அல்லது பேரம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, திருவள்ளூர் கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை.
எங்கள் கிராமத்திற்கு உயர்மட்ட பாலம் அமைப்பதே தீர்வாக இருக்கும். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இரண்டு கிராமங்களிலும், உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் வரப்பெற்றபின் பணி துவங்கப்படும்' என்றார்.