Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறுகிய காலத்தில் பாழான அரசு கட்டடங்களால்...ரூ.98 கோடி வீண்:15 முதல் 20 ஆண்டுகளாக ஆயுட்காலம் குறைவு

குறுகிய காலத்தில் பாழான அரசு கட்டடங்களால்...ரூ.98 கோடி வீண்:15 முதல் 20 ஆண்டுகளாக ஆயுட்காலம் குறைவு

குறுகிய காலத்தில் பாழான அரசு கட்டடங்களால்...ரூ.98 கோடி வீண்:15 முதல் 20 ஆண்டுகளாக ஆயுட்காலம் குறைவு

குறுகிய காலத்தில் பாழான அரசு கட்டடங்களால்...ரூ.98 கோடி வீண்:15 முதல் 20 ஆண்டுகளாக ஆயுட்காலம் குறைவு

ADDED : செப் 16, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு;திருவள்ளூர் மாவட்டத்தில், 10 - 25 ஆண்டுகளுக்குள் அரசு நிதியில் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்த கட்டடங்களை மக்கள் பயன்படுத்தாததால், அரசு நிதி, 98 கோடி ரூபாய்க்கும் மேல் வீணாகியுள்ளது. மேலும், கட்டடங்களின் ஆயுட்காலம், 30 ஆண்டுகளில் இருந்து, 15 - 20 ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருவது வேதனை அளிப்பதாகவும், இதற்கு தரமற்ற கட்டுமானமே காரணம் என்றும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, கடம்பத்துார், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், பூண்டி உட்பட, 14 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 526 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட அரசு கட்டடங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெறும். அதன்படி, ஊரக வளர்ச்சி துறை மூலம், மாவட்டத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, கிராம சேவை மையம், மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை என, கடந்த 10 - 25 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

ஊராட்சிக்கு ஒன்று என மாவட்டம் முழுதும், 68.50 கோடியில் கட்டப்பட்ட 526 கிராம சேவை கட்டடத்தில், 314 கட்டடங்கள் சேதமடைந்தும், பயன்பாடின்றியும் உள்ளன.

மாவட்டம் முழுதும், 35 கோடியில் கட்டப்பட்ட, 500க்கும் மேற்பட்ட மகளிர் சுகாதார வளாக கட்டடங்களில், 400க்கும் மேற்பட்டவை சேதமடைந்து உள்ளன.

அதேபோல, கால்வாய், அங்கன்வாடி, பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் சேதமாகியுள்ளன. இதனால், அரசின் நிதி, 98 கோடி ரூபாய்க்கும் மேலாக வீணாகியுள்ளது.

பொதுமக்கள் கட்டும் வீடுகளின் ஆயுட்காலத்தை ஒப்பிடுகையில், சமீபத்தில் கட்டப்பட்ட அரசு கட்டடங்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது.

இதனால், அந்த கட்டடங்களை அகற்றி விட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் போது, அரசு நிதி அதிகளவில் செலவிடும் நிலை ஏற்படுகிறது.

அத்துடன், குக்கிராமங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசின் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. அரசு துறை சார்ந்த கட்டடங்களில் முதலில் பாதிப்படைவது கூரை. இது சிதைந்து, பயன்படுத்துவோர் மீது விழுந்தால், முழு கட்டடமும் பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடும்.

பராமரிப்பு பணி செய்தாலும், அதுவும் பெரிய அளவில் பலனின்றி, அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டடம் அகற்றப்படும் நிலைக்கு மாறிவிடுகிறது. அங்கன்வாடி சமையலறை கட்டடங்கள், 10 ஆண்டுகள் கூட தாங்குவதில்லை.

சுடுகாடு சுற்றுச்சுவர், நெற்களம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவை, 3 - 5 ஆண்டுகளுக்குள் சேதமடைகின்றன. கிராமங்களில் அமைக்கப்படும் சிமென்ட் கல் சாலை மற்றும் தார்ச்சாலைகளின் நிலைமையோ படுமோசம்.

இதற்கு முன், 30 ஆண்டு கள் வரை உறுதியாக இருந்த கட்டடங்களின் ஆயுட்காலம், சமீபகால மாக, 10 - 25 ஆண்டுகளாக குறைந்துள்ளது.

முன்பெல்லாம் கட்டட கூரைகளுக்கு ஆற்று மணல் பயன்படுத்தப்படும். தற்போது, எம்.சாண்ட் பயன்படுத்துவதால், கட்டடம் விரைவாக பாழடைந்து விடுவதாக கூறப்படுகிறது.

எனவே, 'அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அரசு கட்டடங்களின் ஆயுட்காலத்தை அதிகரித்து, மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும். மேலும், உயிர்ப்பலி அசம்பாவிதமும் தவிர்க்கப்படும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கூரை சேதமடைவதே முதன்மை அரசு கட்டடத்தில் கூரை சேதமடைவதே முதன்மையாக உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், பணி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்வதில்லை. அவர்களின் அலட்சியத்தால் மட்டுமே, அரசு கட்டடங்கள் குறுகிய காலத்தில் வீணாகின்றன. அதேபோல, கட்டடங்களை கட்டி தருவது ஒரு துறை என்றாலும், அதை பயன்படுத்துவோர் முறையாக பராமரிப் பதில்லை. உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இந்த நிலையை மாற்றுவது கடினம். - வி.ஜெயபிரகாஷ், திருவள்ளூர்.

ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குகிறோம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அரசு சார்பில் நடைபெறும் பணிகளை முறையாக ஆய்வு செய்கின்றனர். பணி மேற்பார்வையாளர், 2 லட்சம் ரூபாய் வரையிலான கட்டட பணிகளை பார்வையிடுவார். பொறியாளர்கள், 2 ---- 5 லட்சம் ரூபாய் பணி, உதவி இயக்குநர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு மேலான கட்டட பணிகளை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குகின்றனர். பணியை சரியாக செய்யாத ஒப்பந்ததாரர்களிடம், குறையை சுட்டிக்காட்டி சரிசெய்கிறோம். - ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, திருவள்ளூர்.

1 திருவால ங்காடு ஊராட்சி, பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், 2015ல் கட்டப்பட்டது. 10 ஆண்டுகளான நிலையில், தற்போது கட்டடம் சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது. 2 திருவாலங் காடில், 2016ல் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தின் கூரை மற்றும் தரை, 9 ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. 3 பூண்டி ஒன்றியம் தோமூரில், 2008ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, 17 ஆண்டுகளான நிலையில், கூரை சேதமடைந்ததுடன், மற்ற பகுதியில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. 4 முத்துக்கொண்டாபுரம் ரேஷன் கடை, 2011ல் கட்டப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளில் தரை மற்றும் கூரை முழுதும் சேதமடைந்துள்ளது. 5 திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம், பொன்னாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், 2006ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 19 ஆண்டுகளில் துாண்கள் சேதமடைந்து, தொட்டியில் இருந்து சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விழுகின்றன .







      Our Apps Available On




      Dinamalar

      Follow us