Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொள்முதல் நிலையங்களின் தாமதத்தால்... விவசாயிகள் விரக்தி:மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்

கொள்முதல் நிலையங்களின் தாமதத்தால்... விவசாயிகள் விரக்தி:மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்

கொள்முதல் நிலையங்களின் தாமதத்தால்... விவசாயிகள் விரக்தி:மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்

கொள்முதல் நிலையங்களின் தாமதத்தால்... விவசாயிகள் விரக்தி:மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்

UPDATED : செப் 17, 2025 11:12 PMADDED : செப் 17, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமதமாக துவக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து, உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யாததால், நெல் மழையில் நனைந்தும், முளைத்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பேரம்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்திற்கு, 45,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 100 கிலோ மூட்டை, 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அதேசமயம், நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில், மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தியது.

சம்பா பருவத்திற்கு தயாராக வேண்டிய சூழலிலும், மழையால் நெற்பயிர்கள் பாதித்துவிடாமல் இருப்பதை தவிர்க்கவும் விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகினர். வேறுவழியின்றி, வெளி சந்தையில், 75 கிலோ மூட்டை, 1,300 - 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

விவசாயிகளின் தொடர் கோரிக்கைக்கு பின், தற்போது மாவட்டத்தின் 65 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. சொர்ணவாரி பருவமானது, ஜூன் - செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படுகிறது.

செப்டம்பரில் அறுவடைக்கு வரும் நிலையில், ஆகஸ்ட் இறுதியிலேயே கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும். ஆனால், செப்டம்பரில் அறுவடை பணிகளை துவக்கிய பின்னரே கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாக, விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களிலும், 'லாரி இல்லை... குடோனில் இடம் இல்லை' எனக்கூறி, நெல்லை சரிவர கொள்முதல் செய்யாமல், அலைக்கழித்து வருகின்றனர்.

இதனால், அறுவடை செய்தவற்றை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் நெற்களங்களில் குவித்தும், டிராக்டர்களில் அடுக்கி வைத்தும் காத்திருக்கின்றனர். அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மழையில் நனைந்து வீணாகி உள்ளன.

பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 23.40 லட்சம் கிலோ நெல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதே நிலை தான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:

அறுவடை காலங்களை கண்காணித்து தான் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும், 10 தார்ப்பாய் வழங்கப்படுகின்றன. சில இடங்களில், மழையில் நனைந்து முளைவிட்ட நெல்லை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர்


கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், 500 ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளன. பேரம்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய வேண்டும். அங்கு கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

விவசாயிகள் அறுவடை செய்தவற்றை நெல் களங்களில் உலர வைத்து காத்திருக்கின்றனர். ஒரு சில இடங்களில், அவ்வப்போது பெய்து வரும் மழையில் நனைந்து, முளைப்பு விட்டு வீணாகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை



ஊத்துக்கோட்டை வட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

சூளைமேனி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதியில் உள்ள வி.சி.,யினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காலதாமதம் ஆனது.

இதனால், அறுவடை செய்தவற்றை உலர வைக்க இடம் இல்லாமல், விவசாயிகள் சூளைமேனி - தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்கா சாலையில் கொட்டி உலர்த்தினர். தொடர் மழையால் உலரவைக்கப்பட்ட நெல் நனைந்து பாழாகின.

நேற்று சூளைமேனி சமுதாய கூடத்தில் போலீஸ் பாதுகாப்புடன், அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்றன.

வியாபாரிகளுக்கு தான் லாபம்

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பில் காலதாமதம் ஏற்படுவதால், வேறு வழியின்றி விவசாயிகள் வெளிசந்தையில், அரசின் கொள்முதல் விலையயை விட குறைவாக விற்பனை செய்கின்றனர். அதேசமயம் வியாபாரிகள் நெல் வாங்கும்போது, விவசாயிகளிடம் இருந்து சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெறுகின்றனர். அவர்கள் தான், அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் சிட்டா, அடங்கலை வைத்து, நெல்லை விற்று லாபம் பார்க்கின்றனர். எனவே, கூடுதல் இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
- ஆர்.எஸ்.ராஜசேகரன், விவசாயி, அரசூர், பொன்னேரி.


மழையில் வீணாகும் அவலம்
கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு பதிவு செய்து ஒரு வாரமாகிறது. இதுவரை வாங்கவில்லை. இதோ, அதோ என அலைக்கழிக்கின்றனர். பதிவு செய்யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். தற்போது என்னிடம், 300 மூட்டை நெல் வைத்திருக்கிறேன். அவை, மழையில் நனைந்து வீணாகும் நிலையில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். ஏராளமான விவசாயிகள் இதே நிலையில் தான் உள்ளனர்.
- பி.தினேஷ், விவசாயி, பனப்பாக்கம், பொன்னேரி.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us