Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விவசாயிகளுக்கு அரசு நல உதவிகள் கிடைப்பதில்...சிக்கல்:9 வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலி

விவசாயிகளுக்கு அரசு நல உதவிகள் கிடைப்பதில்...சிக்கல்:9 வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலி

விவசாயிகளுக்கு அரசு நல உதவிகள் கிடைப்பதில்...சிக்கல்:9 வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலி

விவசாயிகளுக்கு அரசு நல உதவிகள் கிடைப்பதில்...சிக்கல்:9 வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலி

ADDED : ஜூன் 11, 2025 03:06 AM


Google News
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இயங்கி வரும் வேளாண் துறை அலுவலகத்தில், 14 உதவி இயக்குனர் பணியிடங்களில் தற்போது ஐந்து பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒன்பது இடங்கள் காலியாக உள்ளதால் அரசு அறிவிக்கும் வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன . மேலும்கிசான் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கும் உதவி தொகை பெறுவதிலும் காலதாமதம் ஆவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, கடம்பத்துார், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பூண்டி உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், விவசாயிகள் நெல், வேர்கடலை, கரும்பு, சிறுதானிய வகைகள் மற்றும் காய்கறி, பூ போன்றவை பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பொன்னேரி, திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை போன்ற ஒன்றியங்களில், விவசாயிகள் அதிகளவில் நெல் மற்றும் காய்கறி பயிரிடுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் ஏற்படுத்தி, உதவி இயக்குனர், வேளாண் அலுவலர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் நியமித்து விவசாயிகளிடம் பயிர் பாதுகாப்பு, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு நலதிட்ட உதவிகள், மானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன் அடையும் வகையில் செயல்படுகிறது.

வேளாண் உதவி இயக்குனர் மாதந்தோறும் விவசாயிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள், விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுவது குறித்து விளக்கி கூறிவார். இதுதவிர வேளாண் அலுவலர், உதவி அலுவலர்களை கிராமங்களுக்கு நேரில் அனுப்பி விவசாயிகள் சாகுபடி பயிர் குறித்தும், பூச்சி கொல்லி நோய் பாதிப்பு எவ்வாறு தடுப்பு, பயிர்களுக்கு என்ன உரம் இடுவது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவார்.

மேலும் விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குதல், மத்திய அரசின், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை போன்ற அரசு நலதிட்ட உதவிகள் வேளாண் உதவி இயக்குனர்கள் விவசாயிகள் தேர்வு செய்து, அரசுக்கு பரிந்து செய்வர்.

இந்நிலையில், மாவட்டத்தில் 14 வேளாண் உதவி இயக்குனர் பணியிடத்தில் வெறும் ஐந்து உதவி இயக்குனர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆர். கே.பேட்டை, திருவள்ளூர், பூண்டி, சோழவரம் மற்றும் கடம்பத்துார் ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே உதவி இயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மீதமுள்ள 9 உதவி இயக்குனர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அரசு நலதிட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காலியாக வேளாண் உதவி இயக்குனர் பணியிடத்தில் அதே அலுவலகத்தில் பணிபுரியும் வேளாண் அலுவலர் அல்லது உதவி வேளாண் அலுவலர் பொறுப்பு உதவி இயக்குனராக பணியாற்றுவதால், அன்றாட பணிகளை செய்வதற்கு முடியாமல் திணறுகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, காலியாக உள்ள, உதவி இயக்குனர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.

ஆண்டுதோறும் வேளாண் துறையில் பணியிட மாறுதலுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பெரும்பாலான உதவி இயக்குனர்கள், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருவதற்கு விருப்பம் வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற்று செல்கின்றனர். நடப்பாண்டில் மொத்தம், 44 வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களில் ஒருவர் கூட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரவில்லை.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர், உதவி வேளாண் அலுவலர்கள் என, வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மாதந்தோறும், மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் தயாரித்து அனுப்புகிறோம். உதவி இயக்குனர் பணியிடம் நிரப்புவது அரசின் கொள்கை முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us