Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நெல் கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கலக்கம்!வியாபாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்

நெல் கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கலக்கம்!வியாபாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்

நெல் கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கலக்கம்!வியாபாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்

நெல் கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கலக்கம்!வியாபாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்

ADDED : செப் 22, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
சென்னை:எந்த முன்னறிவிப்பும் இன்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 15 நாட்களாக அரசின் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், கிடங்குகளுக்கு வெளியே மழையிலும், வெயிலிலும் நெல் மூட்டைகள் முடங்கியுள்ளன. மழையால் நெல் முளைவிடுமோ என்று, விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நெல் சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. நெல் பயிரை மட்டும் முப்போகம் சாகுபடி செய்யும் பல விவசாயிகள், இந்த மாவட்டங்களில் உள்ளனர்.

இம்மாவட்டங்களில் விளையும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்காக, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில், 160 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 133 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 90 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

இதன் வாயிலாக, ஆகஸ்ட் வரை செங்கல்பட்டில், 2.02 லட்சம் டன்கள், காஞ்சிபுரத்தில், 1.10 லட்சம் டன்கள், திருவள்ளூரில் 1.06 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆர்வம் இம்மாவட்டங்களில், ஆறுகள், ஏரிகள், கிணறுகள், நிலத்தடிநீர் கையிருப்பு திருப்திகரமாக இருந்ததால், ஜூன் மாதம் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

அதன்படி, திருவள்ளூரில், 66,690 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 32,851 ஏக்கர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27,170 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெல், அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

நெல் மூட்டைகளை டிராக்டர், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, 15 நாட்களாக இம்மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால், அங்கு திடீரென பெய்யும் மழையிலும், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தாமதம் மழையில் நனையும் நெல் மூட்டைகள், முளைப்பு எடுத்தால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

கிடங்கில் இடமில்லாததாலும், அரசிடம் நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது, 65 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.

அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால், இந்த கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

நாள்தோறும் கொள்முதல் செய்யும் நெல்லை, அரவை மில்லுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், அவை அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.

இதனால், கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலம் துவங்கவுள்ளதால், நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகிகள், இதை சரி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூட்டைக்கு ரூ.50 கமிஷன் அடங்காத அதிகாரிகள் நெல் அறுவடைக்கு முன், கிராம நிர்வாக அதிகாரியிடம் சிட்டா அடங்கல், ஆதார், காண்பித்து சான்று பெற வேண்டும். இதற்காக, கிராம நிர்வாக அதிகாரிக்கு, 1,000 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். அவர் கொடுக்கும் சான்றிதழுடன் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரியை சந்திக்க வேண்டும். பின், அவரது அறிவுரைப்படி, உள்ளூர் கிராம பெருதனக்காரரை சந்தித்து, 40 கிலோ மூட்டைக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சில இடங்களில், கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர்களே, அந்த தொகையை வசூலிக்கின்றனர். அதன்பிறகே, கொள்முதல் அனுமதி வழங்குகின்றனர். சாகுபடி முடிந்த கையோடு செலவிற்கு பணம் இல்லாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
நகைகள், வீட்டு உபயோக பாத்திரங்கள் ஆகியவற்றை அடகு வைத்தும், கந்து வட்டி வாங்கியும், மூட்டைக்கான கமிஷனை விவசாயிகள் செலுத்துகின்றனர். அதன்பிறகே, விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதலுக்கான பணம் வங்கி கணக்கில் விடுவிக்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருக்கும் விவசாயிகள் விரக்தி அடைகின்றனர். முளைக்கும் அபாயம் உள்ள நெல் மூட்டைகளை, 1,000 ரூபாய் குறைத்து வியாபாரிகள் வாங்கி கொள்கின்றனர். வியாபாரிகளை, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளே அனுப்பி வைக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பலமுறை அறிவுறுத்தியும் அடங்காத அதிகாரிகளால் விவசாயிகள் அவதி தொடர்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us