/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருமழிசையில் 2.97 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு...அத்துமீறல்:முதல்வர் தனிபிரிவில் புகார் அளித்தும் அலட்சியம்திருமழிசையில் 2.97 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு...அத்துமீறல்:முதல்வர் தனிபிரிவில் புகார் அளித்தும் அலட்சியம்
திருமழிசையில் 2.97 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு...அத்துமீறல்:முதல்வர் தனிபிரிவில் புகார் அளித்தும் அலட்சியம்
திருமழிசையில் 2.97 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு...அத்துமீறல்:முதல்வர் தனிபிரிவில் புகார் அளித்தும் அலட்சியம்
திருமழிசையில் 2.97 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு...அத்துமீறல்:முதல்வர் தனிபிரிவில் புகார் அளித்தும் அலட்சியம்
ADDED : ஜூன் 27, 2025 10:59 PM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.97 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அ.தி.மு.க., வினர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி தமிழக முதல்வர் தனிபிரிவிற்கு புகார் அளித்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமழிசை பேரூராட்சியில் அ.தி.மு.க., முன்னாள் செயலராக பதவி வகித்து வந்தவர் என். எஸ்.பிரகாசம். இவர் இப்பகுதியில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பகுதியில் சர்வே எண் 56/1ல் அமைந்துள்ள 2.62 ஏக்கரில் உள்ள குட்டையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார். அங்கு போர்வெல் அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் விற்பனையும் செய்து வருகிறார்.
இதேபோல் பேரூராட்சியின் அ.தி.மு.க., முன்னால் தலைவரும், தற்போதைய 7 வது வார்டு உறுப்பினருமான ரமேஷ் என்பவர் சர்வே எண் 62.4ல் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கில் 35 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி அனுபவித்து வருகிறார்.
கோரிக்கை
மேலும் பேரூராட்சி 1வது வார்டு அ.தி.மு.க. , உறுப்பினரான பிரியாவின் கணவர் சுரேஷ்குமார் என்பவர் சர்வே எண் 440/9ல் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் சர்வ எண் 457ல் புளியங்குட்டைக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் பகுதியில் வீடு கட்டி ஆக்கிரமித்து உள்ளார்.
இவ்வாறு திருமழிசை பேரூராட்சியில் அரசு நிலம் சுமார் 2.97 ஏக்கர் நிலம் அ.தி.மு.க., வைச் சேர்ந்த மூவரின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோல் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு மற்றும் ஹிந்து சமய அறநியைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் என பலவகை நிலங்கள் தனிநபர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.97 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருமழிசை பேரூராட்சியில் 2.97 ஏக்கர் ஆக்கிரமிப்பு குறித்து முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட புகார் குறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
சர்வே எண் 56/1ல் அமைந்துள்ள 2.62 ஏக்கர் கக்களவன் காவடி குட்டையை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.
இதையடுத்து குட்டையை சுற்றி கம்பி வேலி அமைக்க 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூந்தமல்லி ஒன்றிய அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் கம்பி வேலி அமைக்கப்படும்.
நோட்டீஸ்
போர்வெல் அமைத்து குடிநீர் விற்பனை செய்யும் இடம் தனிநபருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதி வாங்கி நடத்தி வருகின்றனர். பாதை இல்லாததால் குட்டையை ஆக்கிரமித்து உள்ளனர்.
சர்வே எண் 62.4ல் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கில் 35 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ரமேஷ்க்கு கடந்த 19ம் தேதி 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டுமென நோட்டீஸ் வழங்கியுள்ளோம். காலதாமதம் ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
மேலும் புளிங்குட்டை ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். பேரூராட்சி அதிகாரிகள் தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்