Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேர்தல் பிரிவு எழுத்தருக்கு 5 மாதமாக சம்பளம் கிடைக்கல

 தேர்தல் பிரிவு எழுத்தருக்கு 5 மாதமாக சம்பளம் கிடைக்கல

 தேர்தல் பிரிவு எழுத்தருக்கு 5 மாதமாக சம்பளம் கிடைக்கல

 தேர்தல் பிரிவு எழுத்தருக்கு 5 மாதமாக சம்பளம் கிடைக்கல

ADDED : டிச 01, 2025 03:40 AM


Google News
திருத்தணி: தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் எழுத்தர்களாக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள், ஐந்து மாதமாக சம்பளம் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் தேர்தல் பிரிவில், எழுத்தர்களாக ஒப்பந்த அடிப்படையில், 2012ம் ஆண்டு முதல் மொத்தம் 79 பேர் பணியாற்றி வந்தனர்.

இவர்களுக்கு, தினமும் 730 ரூபாய் வீதம், மாதத்தில் எத்தனை நாட்கள் பணிபுரிகின்றனர் என கணக்கெடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இவர்கள், வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரித்து, உதவி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து, தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் வரை வேலை செய்தனர். அதன்பின், அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், கடந்தாண்டு நவம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் வரை, ஐந்து மாத சம்பளம் இதுவரை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால், ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மூன்று மாவட்ட கலெக்டர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறியதாவது:

கடந்த 13 ஆண்டுகளாக தேர்தல் பிரிவில், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தோம். மாவட்ட நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென, 'நிதி பற்றாக்குறை உள்ளதால், உங்களுக்கு வேலை கிடையாது' எனக் கூறி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

எங்களுக்கு சம்பளம் தலைமை செயலகத்தில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படுகிறது. பின், தாசில்தார் அலுவலகத்திற்கு நிதி அனுப்பி, கருவூலம் மூலம் எங்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து வந்தனர். இதனால், நாங்கள் பிறவேலைக்கு செல்லாமல் இருந்தோம்.

தற்போது, ஐந்து மாத சம்பளம் வழங்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சம்பளம் வராததால் எங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக திண்டாடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us