/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரம் இல்லை: எம்.எல்.ஏ., அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரம் இல்லை: எம்.எல்.ஏ.,
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரம் இல்லை: எம்.எல்.ஏ.,
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரம் இல்லை: எம்.எல்.ஏ.,
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரம் இல்லை: எம்.எல்.ஏ.,
ADDED : செப் 13, 2025 01:44 AM

மீஞ்சூர்:பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் அரசு பள்ளியில் ஆய்வு செய்தபோது, மதிய உணவு திட்டத்திற்கு வரும் முட்டைகள் தரமின்றி அழுகிய நிலையில் இருந்தது. உரிய நடவடிக்கை எடுக்கும்படி பி.டி.ஓ., அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மீஞ்சூர் ஒன்றியம் நெய்தவாயல் கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில் நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதை பார்வையிடுவதற்காக, பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் சென்றார்.
அதன்பின், மதிய உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். உணவருந்த காத்திருந்த மாணவர்களிடம், மதிய உணவில் ஏதேனும் குறை உள்ளதா எனக் கேட்டார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிமாற வைத்திருந்த உணவை ஆய்வு செய்தார்.
பின், மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், அரைகுறையாக வேக வைத்த நிலையில் தரமின்றி இருப்பதை கண்டு, சத்துணவு ஊழியர்களிடம் கேட்டபோது, 'ஒரு வாரமாக அழுகிய முட்டைகள் அதிகளவில் வருகின்றன.
'இந்த முட்டைகளை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. அவற்றை தனியாக எடுத்து வைத்து விடுகிறோம்' என தெரிவித்தனர். இதை கேட்ட எம்.எல்.ஏ., உடனடியாக மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'மாணவர்கள் நலன் கருதி, அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகிக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்' என, அறிவுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின், 'தரமின்றி வரும் முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்' என, ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். அரசு பள்ளியில் தரமின்றி, அழுகிய முட்டைகள் வினியோகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள், சத்துணவு மையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.