/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை தயாராகிறது!: 5 மாதங்களில் பயன்பாட்டிற்கு விட திட்டம் திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை தயாராகிறது!: 5 மாதங்களில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை தயாராகிறது!: 5 மாதங்களில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை தயாராகிறது!: 5 மாதங்களில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை தயாராகிறது!: 5 மாதங்களில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
ADDED : ஜூன் 09, 2024 10:58 PM

திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, 45 கோடி ரூபாய் மதிப்பில், 5 அடுக்கு கட்டடம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 120க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர கர்ப்பிணிகளுக்கான பிரசவ வார்டும் செயல்பட்டு வருகிறது.
விபத்துகளில் சிக்கி பலத்த காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் திருத்தணி அரசு மருத்துவமனையில் இல்லாததால், நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறிப்பாக, ரத்த வங்கி, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்-ரே' போன்ற உயர்ரக கருவிகள் இல்லாததால் திருத்தணியில் சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதே ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையை, தரம் உயர்த்தி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து கடந்தாண்டு அதற்கான அரசாணையும் பிறப்பித்து, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முதற்கட்டமாக, 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அரசு செய்தது.
பின், அதே ஆண்டு மே மாதம் திருத்தணி பொதுப்பணித் துறையினர், திருத்தணி அரசு மருத்துவமனை அருகே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான, 5 அடுக்கு கட்டடம் கட்டும் பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு ஒப்பந்தாரர் மூலம் பணிகள் துவங்கினர். மொத்தம், 14,500 சதுரடியில் ஐந்து அடுக்கு கட்டடத்தில், மூன்று அறுவை சிகிச்சை அறைகள், சி.டி.., ஸ்கேன் அறை, எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் அறை, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி மையம், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறைகள் உட்பட பல்வேறு அறைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கட்டடப்பணி துரித வேகத்தில் நடந்து வந்தது.
தற்போது, 75 சதவீதம் பணிகள் முடிந்து, அறைகளுக்கு பளிங்கு கற்கள் பதிக்கும் பணி, கழிப்பறைகள் ஏற்படுத்தும் பணி மற்றும் வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.
நவம்பர் மாதம் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா காண அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.