/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிப்போரிடம் வசூல் திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிப்போரிடம் வசூல்
திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிப்போரிடம் வசூல்
திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிப்போரிடம் வசூல்
திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிப்போரிடம் வசூல்
ADDED : மார் 22, 2025 11:33 PM

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடியை காணிக்கையாக வழங்கி, முருக பெருமானை வழிபடுவர். பக்தர்கள் வசதிக்காக, மலைக்கோவிலில் தலைமுடி காணிக்கை அளிக்க, படா செட்டி குளம் அருகே, 1 கோடி ரூபாய் மதிப்பில் குளியல், கழிப்பறை என, நவீன வசதிகளுடன் இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இங்கு, சாதாரண நாட்களில், 300 - 500 பக்தர்களும், விடுமுறை மற்றும் கிருத்திகை நாட்களில், 1,000 - 2000 பக்தர்களும், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம் போன்ற விழாக்களின் போது, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடிப்பர்.
கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு 'கட்டணம் இல்லாமல் இலவசமாக மொட்டை அடிக்கப்படும்' என தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஒரு மொட்டைக்கு, குறைந்தபட்சம், 30 - 100 ரூபாய் வரை கட்டாயமாக வசூலிக்கின்றனர்.
சில பக்தர்கள், 'எதற்கு பணம் தரவேண்டும்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அதற்கு, மொட்டை அடிக்கும் ஊழியர்கள், 'எங்களுக்கு கோவில் நிர்வாகம் சம்பளம் வழங்குவதில்லை' என, பொய்யான தகவல் கூறுகின்றனர்.
இதனால், திருத்தணியில் மொட்டை அடிக்கும் பக்தர்கள் புலம்பியபடி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. ஒரு மொட்டைக்கு, 25 ரூபாய் வீதம் கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மொட்டை அடிக்கும் மண்டபத்தில் ஆய்வு நடத்தி, கட்டாய வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.