Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில்...அடுத்த பஸ் நிலையம்!: மேற்கு மாவட்டங்கள் வழியே பேருந்துகள் இயக்கம்;இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படுவதாக அறிவிப்பு

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில்...அடுத்த பஸ் நிலையம்!: மேற்கு மாவட்டங்கள் வழியே பேருந்துகள் இயக்கம்;இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படுவதாக அறிவிப்பு

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில்...அடுத்த பஸ் நிலையம்!: மேற்கு மாவட்டங்கள் வழியே பேருந்துகள் இயக்கம்;இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படுவதாக அறிவிப்பு

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில்...அடுத்த பஸ் நிலையம்!: மேற்கு மாவட்டங்கள் வழியே பேருந்துகள் இயக்கம்;இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படுவதாக அறிவிப்பு

ADDED : ஜன 05, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:கிளாம்பாக்கம் தொடர்ந்து, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய பணிகளில், சி.எம்.டி.ஏ., திட்டமிட்டு வருகிறது. 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சியவற்றையும் விரைந்து முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் நடவடிக்கையில், சென்னை பெருநகர குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடுக்கு பதிலாக, புறநகர்களில் அந்நிலையங்களை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியது.

விரைவு பேருந்து


அதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிச., 30ல் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், 393.71 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்திலும் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக, முழுதும் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டமான, வேலுார், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் இம்மாவட்டங்கள் வழியே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் சென்று வரும் பேருந்துகளுக்காக, இந்த நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி, ராணிப் பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்இங்கிருந்து பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் தான் இறுதி முடிவு அறிவிக்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019ல் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதற்காக, வீட்டு வசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.

இங்கு, 336 கோடி ரூபாயில், ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2021 பிப்ரவரியில் துவங்கின. தற்போது திட்ட மதிப்பீடு திருத்தியமைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு தளத்துடன் கழிப்பறை வசதி மற்றும் பணியாளர்கள் ஓய்வறை உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன், 396 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்திலேயே முதன் முதலாக முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அமையும். இங்கு 70 புறநகர் பேருந்துகள், 30 ஆம்னி பேருந்துகள், 36 மாநகர பேருந்துகள் நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கீழ்த்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படுகிறது.

பயணியர் வசதிக்காக நான்கு மின்துாக்கிகள், பணியாளர்களுக்கு பிரத்யேகமாக இரண்டு மின்துாக்கிகள், மூன்று நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை கண்காணிக்கும் வகையில், ஒரு கட்டுப்பாட்டு அறையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளையும் முடித்து இந்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருமழிசை அடுத்தகுத்தம்பாக்கம்பேருந்து முனைய பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு குளிர்சாதன வசதி செய்கிற பணிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது



- சி.எம்.டி.ஏ.,வுக்கான

அமைச்சர் சேகர்பாபு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us