/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொசஸ்தலை தடுப்பணையில் 7 அடி உயரம் மணல்.. தேக்கம் . பருவமழையில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் கொசஸ்தலை தடுப்பணையில் 7 அடி உயரம் மணல்.. தேக்கம் . பருவமழையில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
கொசஸ்தலை தடுப்பணையில் 7 அடி உயரம் மணல்.. தேக்கம் . பருவமழையில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
கொசஸ்தலை தடுப்பணையில் 7 அடி உயரம் மணல்.. தேக்கம் . பருவமழையில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
கொசஸ்தலை தடுப்பணையில் 7 அடி உயரம் மணல்.. தேக்கம் . பருவமழையில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
ADDED : செப் 01, 2025 11:27 PM

பள்ளிப்பட்டு :நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மேல்மட்டம் வரை மணல் மட்டுமே தேங்கி உள்ளது. இதனால், தடுப்பணை கட்டப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவம்ழையில் பெருவெள்ளம் ஏற்பட்டால், ஊருக்குள் வெள்ளம் புகும் அபாய நிலை உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
கொசஸ்தலை ஆற்றுக்கு ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணை மற்றும் புல்லுார் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து லவா ஆறு வாயிலாகவும் நீர்வரத்து உள்ளது. கடந்த 2020 முதல் ஆண்டு தோறும் நவ., டிச., மாதங்களில் கொசஸ்தலையில் வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது, கொசஸ்தலையில் அளவு கடந்த வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. மேலப்பூடி அருகே ஆற்றின் கரைகளை தாண்டி பாய்ந்த ஆற்று வெள்ளம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.
இதில், மூன்றடுக்கு வகுப்பறை கட்டடத்தின் அடித்தளம் கடும் சேதம் அடைந்தது. மண்ணரிப்பு காரணமாக தரைதளத்தின் வகுப்பறை, 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது.
பள்ளி விடுமுறை நாளில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த வெள்ளத்தின் போது பள்ளி சுற்றுச்சுவரும் இழுந்தது. இதே போல், சொரக்காய்பேட்டை கிராமத்தை ஒட்டிய கரையோர பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் சுடுகாடு உள்ளிட்ட பகுதியில் கடும் மண்ணரிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பெரும் சேதத்தை எதிர்கொண்ட அரசு பள்ளிக்கு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. ஏழு அடி உயரமும், 200 மீட்டர் அலகமும் கொண்ட இந்த தடுப்பணையில் வெள்ளம் தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்டது. இதனால், மழைநீர் வீணாக வெளியேறி சென்று கடலில் கலப்பது தவிர்க்கப்படும். சொரக்காய்பேட்டை சுற்றுப்பகுதியின் நிலத்தடிநீர் மட்டம் உயரும் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டது.
எதிர்பார்த்ததிற்கு மாறாக, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த தடுப்பணையில் மணல் குவிந்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக, தடுப்பணையின் ஏழு அடி உயரத்திற்கும் மணல் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளது.
இதனால், தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை தான் உள்ளது. தடுப்பணையில் மணல் தேங்கி நிற்பதால் தான், 2021ல் வெள்ளம் திசைமாறி பாய்ந்தது எனவும் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாதிப்பை தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரைகள், நீர்வளத்துறை சார்பில் பலப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் 2021ல் நடந்தது போன்ற பாதிப்பு ஏற்படாதபடி, தடுப்பணையில் தேங்கியுள்ள மணலை அகற்ற, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல், பள்ளிப்பட்டு நீர்வளத்துறை அலுவலகம் பின்புறம் குசா ஆற்றில் உள்ள தடுப்பணையும், திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் உள்ள தடுப்பணையும் மணலால் நிரம்பியுள்ளன.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛ஆற்றில் மணல் அள்ள அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆற்றின் கரைகள் வலுவிழந்து காணப்பட்டால் அதை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.