Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி

ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி

ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி

ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி

ADDED : ஜூன் 22, 2025 07:53 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு: கடந்தாண்டை விட இந்தாண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் இரண்டே அரசு கலைக் கல்லுாரி உள்ளதால், 'சீட்' கிடைக்காமல், 6,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில் இருந்து, ஆண்டுதோறும் 30,000 மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லுாரி படிப்புக்கு செல்கின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் சில தனியார் பள்ளி மாணவர்களின் விருப்பமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.

ஆர்வம்


திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் லோகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லுாரி மற்றும் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி என, இரண்டே கல்லுாரிகள் மட்டுமே உள்ளன.

திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலையில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்; பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்; பி.காம்., கணக்குப்பதிவியல், வணிகவியல், தாவரவியல், ஆங்கில வழியில் பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., உட்பட, மொத்தம் 17 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இளங்கலை பாடப்பிரிவுகளில் ஆண்டுதோறும், 948 மாணவர்கள் பயில இடம் உள்ளன.

அதேபோல், முதுகலை பட்டப்படிப்பில், எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், எம்.காம்., பொது, கணக்குப்பதிவியல், வணிகவியல், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளும், பிஎச்.டி.,யில், வரலாறு, பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர அரக்கோணம், திருத்தணி, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 4,000 - 5,000 மாணவர்கள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் விண்ணப்பிக்கின்றனர்.

குறைவான இடங்கள்


அதேபோல, பொன்னேரி லோகநாத நாராயணசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 13 இளநிலை பட்டப்படிப்புகள், ஒன்பது முதுநிலை பட்டப்படிப்புகள், மூன்று பிஎச்.டி., பாடப்பிரிவுகள் மற்றும் இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இங்கு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநிலை படிப்புக்கு 4,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இக்கல்லுாரியில் 686 இடங்கள் உள்ளன.

இரு கல்லுாரியிலும் சேர்ந்து ஒரு கல்வியாண்டில் குறைந்தது, 8,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இடங்கள் இருப்பதோ, 1,634 மட்டுமே.

இதனால், ஆண்டுக்கு 6,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

2.05 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஒருங்கிணைப்பாளர் கூறியதவாது:

தமிழகம் முழுதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை பட்டப் படிப்புகளில், 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. 2.05 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். குறைந்தது 75,000 பேருக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்படும். சமீபகாலமாக கலை, அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

பெற்றோர் அதிருப்தி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 1965ம் ஆண்டும், திருத்தணியில் 1970ம் ஆண்டும் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆரம்பிக்கப்பட்டது.

பின், 55 - 60 ஆண்டுகளாக ஒரு அரசு கலை கல்லுாரி கூட துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அரசின் மீது கல்வியாளர்கள், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் கல்லுாரி

அமைக்க வேண்டும்திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரத்தில் வசித்து வருகிறேன். முதல் தலைமுறை பட்டதாரி. அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறேன். ஆனால், என் தம்பிக்கு அரசு கல்லுாரியில் 'சீட்' கிடைக்கவில்லை. கூடுதலாக மாவட்டத்தில் அரசு கல்லுாரி இருந்தால் கிடைத்திருக்கும். தற்போது தனியார் கல்லுாரியில் படிக்கிறான். கல்லுாரியில் கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைவதே.- கே.பிரகாஷ்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவன்.



5 மணி நேரமாகிறதுதிருத்தணி, பொன்னேரி அரசு கல்லுாரிகள் மட்டும் போதாது. திருவாலங்காடு, மணவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள், இளங்கலை, முதுகலை படிப்பை படிக்க சென்னைக்கு செல்கின்றனர். கல்லுாரிக்கு சென்றுவர 5 மணி நேரமாகிறது. இதனால், பெற்றோர்களும் குழந்தைகள் எப்போது வீடு திரும்புவர் என, அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைந்தால் வசதியாக இருக்கும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.ரங்கநாதன், 65,திருவாலங்காடு.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us