/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எம்.ஆர்.எப்., ஆலைக்கு ரூ.12.60 லட்சம் அபராதம்எம்.ஆர்.எப்., ஆலைக்கு ரூ.12.60 லட்சம் அபராதம்
எம்.ஆர்.எப்., ஆலைக்கு ரூ.12.60 லட்சம் அபராதம்
எம்.ஆர்.எப்., ஆலைக்கு ரூ.12.60 லட்சம் அபராதம்
எம்.ஆர்.எப்., ஆலைக்கு ரூ.12.60 லட்சம் அபராதம்
ADDED : ஜன 30, 2024 10:52 PM
சென்னை:சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டதற்காக சென்னை, திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எப்., நிறுவனம், 12.60 லட்சம் ரூபாய் இழப்பீடு1 செலுத்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச் சங்கம்' சார்பில், 2021ல் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் எனும்- சி.ஆர்.இசட்., மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், சென்னை, திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எப்., டயர் பரிசோதனை தொழிற்சாலையும், கிடங்கும் செயல்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.ஆர்.இசட்., அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டமைப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
திருவொற்றியூர் மற்றும் எர்ணாவூரில், பகிங்ஹாம் கால்வாயில் இருந்து 1.5 கி.மீ., வங்காள விரிகுடாவில் இருந்து 800 மீட்டர், கூவம் ஆற்றிலிருந்து 3.5 கி.மீ., தொலைவிலும் எம்.ஆர்.எப்., டயர் பரிசோதனை ஆலை அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நேரடியாக கடலோரப் பகுதிகளில் வெளியேற்றுவதால், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு சீரழியும். எனவே, இப்பகுதியில் எந்த செயல்பாடுகளுக்கும் சி.ஆர்.இசட்., அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
திருவொற்றியூர் எம்.ஆர்.எப்., ஆலை வளாகத்தில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 29,676 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்ட கிடங்கு, டயர் உற்பத்தி, பரிசோதனை போன்ற தொழில்துறை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சி.ஆர்.இசட்., விதிகளுக்கு மாறாக நிலத்தடி நீரும் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்ட விரோத கட்டமைப்புகளையும் அகற்ற வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், சி.ஆர்.இசட்., போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் விதிகளை மீறாமல் எம்.ஆர்.எப்., நிறுவனம் கடைப்பிடிக்கிறதா என்பதை தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
சி.ஆர்.இசட், மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாமல், எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் கட்டுமானங்களுக்கு சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக எம்.ஆர்.எப்., நிறுவனம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, சுற்றுச்சூழல் இழப்பீடாக, நான்கு வாரங்களுக்குள் 12.60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
அலட்சியம், நடைமுறைகளை பின்பற்ற தவறியதற்காக சி.எம்.டி.ஏ.,வுக்கும் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ.,விடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.