/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் கழிப்பறை உடைப்பு ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் கழிப்பறை உடைப்பு
ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் கழிப்பறை உடைப்பு
ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் கழிப்பறை உடைப்பு
ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் கழிப்பறை உடைப்பு
ADDED : ஜூன் 08, 2024 06:05 AM

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக, 'நபார்டு' வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், 2022 - -23ம் ஆண்டு 6.77 லட்சம் ரூபாயில் கழிப்பறை கட்டப்பட்டது.
ஆனால், கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் முன் கழிப்பறை சேதமடைந்தது. புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையின் இரும்பு குழாய், சிறுநீர் கழிக்கும் இடம், மலம் கழிக்கும் இடம், தண்ணீர் வரும் குழாய் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
பல மாதங்களாகியும் தற்போது வரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில்,கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், வகுப்பறை, கழிப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை சீரமைத்து துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கழிப்பறை சீரமைக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளி துவங்கவுள்ள நிலையில், சேதமடைந்த கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வரும், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தீவிர துப்புரவு பணி துவங்கியது.
பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைக்கு கருப்பு வர்ணம் பூசப்பட்டது. குடிநீர் குழாய்களும் சீரமைக்கும் பணி நடந்தது. இருப்பினும் உடைக்கப்பட்ட கழிப்பறை சீரமைக்கப்படவில்லை.