/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 24 முதல் ரூ.47 கோடியில் திருத்தணி புறவழிச்சாலை தயார்: சென்னை - திருப்பதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு 24 முதல் ரூ.47 கோடியில் திருத்தணி புறவழிச்சாலை தயார்: சென்னை - திருப்பதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
24 முதல் ரூ.47 கோடியில் திருத்தணி புறவழிச்சாலை தயார்: சென்னை - திருப்பதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
24 முதல் ரூ.47 கோடியில் திருத்தணி புறவழிச்சாலை தயார்: சென்னை - திருப்பதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
24 முதல் ரூ.47 கோடியில் திருத்தணி புறவழிச்சாலை தயார்: சென்னை - திருப்பதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ADDED : ஜூலை 21, 2024 07:02 AM

திருத்தணி: திருத்தணியில், 47 கோடி ரூபாயில் புறவழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்து உள்ள நிலையில், வரும் 24ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு விட மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. புறவழிச்சாலையால் திருத்தணி நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக கடந்த 2008ல், 47 கோடி ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகளுக்கு திட்டமிட்டது.
கடந்த 2012ல் நிலம் கையகப்படுத்தி வழங்கியதற்காக நெடுஞ்சாலை துறையினர், 11 கோடி ரூபாயை மாவட்ட வருவாய் துறையினருக்கு வழங்கியது.
பின், 2013ல் சென்னை - - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரக்கோணம் சாலைக்கு, 30 மீ., அகலம், 3.24 கி.மீ., துாரத்திற்கு, 36 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி, கடந்த 2019ல் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் தார்ச் சாலை பணிகளை முழுமையாக முடித்தனர்.
மேலும், பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே, 5 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம், எம்.ஜி.ஆர்., நகர் அருகே, 10.50 கோடி ரூபாயில் நெடுஞ்சாலை துறையினர் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் உயர்மட்ட பாலம், கடந்த 2020ல் கட்டப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் ரயில்வே நிர்வாகம், 16 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் மூன்று துாண்கள் அமைத்து. 500 டன் எடை கொண்ட இரும்பால் செய்யப்பட்ட ஐந்து கர்டர்கள் பொருத்தும் பணி துவங்கியது.
கடந்த மார்ச் மாதம் ரயில்வே மேம்பாலம் அமைத்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைத்தது.
தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர், ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் இணைப்பு பாலம் கட்டும் பணிகள் துவங்கி, கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருபுறமும் இணைப்பு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
தற்போது உயர்மட்ட பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் புறவழி தார்ச்சாலை முழுதும், சாலையின் இருபுறமும் நடைபாதை, இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வண்ணக் கோடுகள் மற்றும் 'ரிப்ளக்டர்கள்' அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
புறவழிச்சாலை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு விடுவதால், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதுடன், விபத்துகளும் தடுக்கப்படும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி புறவழிச்சாலை பணிகள் முழுதும் முடிந்துள்ளன. சாலையில் வண்ணம் தீட்டும் பணிகளும் நாளையுடன் முடிவடையும்.
புறவழிச்சாலைப் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் எங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் வசதிக்காக அதிகாரப் பூர்வமாக வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். வரும் 24ம் தேதி புறவழிச்சாலை திறக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தான் தேதி முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னை, திருப்பதி மற்றும் வேலுார் ஆகிய மார்க்கத்தில் இருந்து திருத்தணி நகர் வழியாக அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக செல்வதால், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியும்.
முருகன் கோவிலில் முக்கிய விழாக்கள் மற்றும் திருமண முகூர்த்த நாட்களில் திருத்தணி நகரில் வாகனங்கள் அரை கிலோ மீட்டர் துாரம் கடக்க, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.