/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம் முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம்
முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம்
முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம்
முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம்
ADDED : ஆக 06, 2024 12:56 AM
சென்னை:திருவாரூரில் உள்ள திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால், ஓராண்டாக மின் உற்பத்தி முடங்கிஉள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டையில், 108 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் உள்ளது. மின் உற்பத்திக்கு எரிபொருளாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. அது மத்திய அரசிடம் வாங்கப்படுகிறது.
தினமும் முழு மின் உற்பத்திக்கு தேவைப்படும், 4.50 லட்சம் கன மீட்டர் எரிவாயு வழங்காமல், 1.70 லட்சம் கன மீட்டர் மட்டுமே வழங்கப்பட்டது.
சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், ஆரம்பத்தில் ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, 2.54 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில், 16.14 ரூபாயாக அதிகரித்தது.
பல முறை மின் வாரியம் கோரிக்கை விடுத்தும், முழு அளவுக்கு எரிவாயு வழங்கப்படவில்லை.
ஒப்பந்தம்
மொத்த நிறுவு திறனில், 15 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது. முழு அளவில் எரிவாயு வழங்காததால், 'கெயில்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், நீட்டிக்கவில்லை. இதனால், 2023 ஆக., 1 முதல் திருமக்கோட்டை மின் நிலையத்தில் உற்பத்தி முடங்கியுள்ளது.
சென்னை எண்ணுாரில் இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனை யம் அமைத்துள்ளது.
அந்த எரிவாயுவை பயன்படுத்தும் வகையில், திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கான பணி துவங்கப்படவில்லை.
பைப் லைன்
சென்னை பேசின் பிரிட்ஜ் மற்றும் எண்ணுாரில் மின் வாரியத்திற்கு சொந்தமாக, பல ஏக்கரில் நிலம் உள்ளது.
எண்ணுாரில், 2,000 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் எரிவாயு குழாய் அமைக்க கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, எண்ணுார் எரிவாயுவை எடுத்துச் செல்ல, திருமக்கோட்டைக்கு பைப் லைன் கூட அமைக்க முடியாது.
எரிவாயு
அங்கு, மின் உற்பத்திக்கு பயன்படும் தளவாடங்களை தனித்தனியே பிரித்து, புதிதாக ஒரு இடத்தில் நிறுவி, மின் உற்பத்தி செய்ய முடியும்.
எனவே, திருமக்கோட்டை மின் நிலையத்தில் உள்ள தளவாடங்களை பயன்படுத்தி, சென்னை எண்ணுார் அல்லது பேசின் பிரிட்ஜில், புதிய மின் நிலையம் அமைக்கலாம். இதற்கு தேவையான எரிவாயுவை, எண்ணுார் முனையத்தில் இருந்து பெறலாம் என்கின்றனர் அதிகாரிகள்.