/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மூடப்பட்ட பீர் தொழிற்சாலையில் திருட்டு ரூ.6.22 லட்சம் காலாவதியான பாட்டில்கள் அழிப்பு மூடப்பட்ட பீர் தொழிற்சாலையில் திருட்டு ரூ.6.22 லட்சம் காலாவதியான பாட்டில்கள் அழிப்பு
மூடப்பட்ட பீர் தொழிற்சாலையில் திருட்டு ரூ.6.22 லட்சம் காலாவதியான பாட்டில்கள் அழிப்பு
மூடப்பட்ட பீர் தொழிற்சாலையில் திருட்டு ரூ.6.22 லட்சம் காலாவதியான பாட்டில்கள் அழிப்பு
மூடப்பட்ட பீர் தொழிற்சாலையில் திருட்டு ரூ.6.22 லட்சம் காலாவதியான பாட்டில்கள் அழிப்பு
ADDED : ஜூலை 09, 2024 11:48 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாக்குப்பம் கிராமத்தில், 33 ஏக்கர் பரப்பளவில் 'அப்போலோ டிஸ்டிலரீஸ் அண்டு பிவரேஜஸ்' என்ற பெயரில் தனியார் பீர் உற்பத்தி தொழிற்சாலை, கடந்த, 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது.
மேக்ஸ் 11000, ஹார்ஸ் பவர் ஆகிய பெயர்களில் பீர் உற்பத்தி செய்து, டாஸ்மாக் நிர்வாகம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது.
ஆண்டுக்கு, 7.50 லட்சம் லிட்டர் பீர் உற்பத்தி செய்த அந்த தொழிற்சாலை, கடந்த, 2018ம் ஆண்டு நிர்வாக குளறுபடியால் நஷ்டமடைந்து மூடப்பட்டது. தற்போது வங்கி ஒன்றின் கட்டுப்பாட்டில் அந்த தொழிற்சாலை உள்ளது.
கடந்த, ஆறு ஆண்டுகளாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாத காலமாக, தொழிற்சாலையின் பின்புறம் உள்ள வற்றை துளையிட்டு மர்ம நபர்கள், திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த பழைய பொருட்களை திருடிய கும்பல், அங்கிருந்த காலாவதியான பீர்களை திருட துவங்கினர்.
தொடர்ந்து சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த துளை வழியாக தொழிற்சாலைக்குள் சென்று பீர்களை எடுத்து குடித்து வருவதாக, கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக தொழிற்சாலையின் பின்புறம், துளையிட்ட சுவற்றின் அருகே ஏராளமான மேக்ஸ் 11000 மற்றும் ஹார்ஸ் பவர் பீர் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், தொழிற்சாலையில் பீர் திருட்டு குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
காலாவதியான பீர்களை குடிப்பதால், கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டியில் ஏற்படக் கூடாது என்பதற்காக, அரசு துரிதமாக செயல்பட்டது.
தொழிற்சாலை குடோனில், 6.22 லட்சம் பீர் பாட்டில்கள் இருப்பது கணக்கிடப்பட்டது. உடனடியாக வங்கி நிர்வாகத்தின் அனுமதி பெற்று, அதை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி நேற்று, பொன்னேரி சப்- -கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மற்றும் போலீசாரால் காலாவதியான பீர் பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
தொழிற்சாலை வளாகத்திற்குள் பொக்லைன் வாயிலாக ஏராளமான பள்ளங்கள் தோண்டப்பட்டன. அந்த பள்ளத்தில், பீர் பாட்டில்களை அட்டை பெட்டிகளுடன் குவித்து, பொக்லைன் கொண்டு இடித்து பாட்டில்களை உடைத்து பீர்களை வெளியேற்றி பள்ளங்களை மூடி வருகின்றனர்.
நேற்று காலை துவங்கிய பணி, மாலை வரை நடைபெற்றது.