/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் ஊராட்சிகளில் சுகாதாரம்...கேள்விக்குறி!:1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அசுத்தம் திருவள்ளூர் ஊராட்சிகளில் சுகாதாரம்...கேள்விக்குறி!:1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அசுத்தம்
திருவள்ளூர் ஊராட்சிகளில் சுகாதாரம்...கேள்விக்குறி!:1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அசுத்தம்
திருவள்ளூர் ஊராட்சிகளில் சுகாதாரம்...கேள்விக்குறி!:1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அசுத்தம்
திருவள்ளூர் ஊராட்சிகளில் சுகாதாரம்...கேள்விக்குறி!:1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அசுத்தம்
ADDED : ஜூன் 28, 2024 02:48 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் சேதமடைந்த 1,250 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பகுதிவாசிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வராதது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப 10,000 லிட்டர் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் லிட்டர் வரை 4,500க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், தற்போது 1,250க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
இவ்வாறு சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில ஊராட்சி பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஊராட்சி பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டும், பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீர் கொள்ளளவு
உதாரணமாக, கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சியில் கடந்த 1989ல் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதையடுத்து 2022 - -23ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 26 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இன்றுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கு முறையாக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாததும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படாததுமே காரணம் என, ஊராட்சி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மோசமான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சீரமைத்து தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை
மேலும் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி ஊராட்சியில், 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, விஷ்ணு சேமநாதஸ்வரர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஓராண்டாக சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விரிசல் அடைந்து, தொட்டியின் அடிப்பாகம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்ந்து விழுவதால், குடியிருப்புவாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைகின்றனர். எனவே, நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் மூலம் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் கணக்கெடுத்து புதிய குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புதிய குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை.மேலும், கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளுக்கு முறையான குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டு கட்டப்படுவதால் ஒன்றிய அலுவலகத்திற்கு முறையான தகவல் எதுவும் தெரிவதில்லை.
இதனால் எங்களால் எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொணடு வரவும், அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.