/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம் ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம்
ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம்
ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம்
ஏரியில் இறந்து மிதந்த ஜிலேபி மீன்கள் அகற்றம்
ADDED : மார் 14, 2025 02:13 AM

ஆவடி:ஆவடி, பெரியார் நகரில் 87.06 ஏக்கர் பரப்பளவு உடைய பருத்திப்பட்டு ஏரி, 2019ல் சீரமைக்கப்பட்டு, பசுமை பூங்காவாக மாற்றப்பட்டது.
இங்கு, 3 கி.மீ., சுற்றளவு நடைபாதை, சிறுவர் பூங்கா, படகு குழாம், உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
பருத்திப்பட்டு ஏரியில் வடக்கு பகுதியில், கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி சுற்று வட்டார பகுதியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீர், சுத்திகரிக்கப்பட்ட பின், ஏரியில் விடப்படுகிறது.
இந்நிலையில், பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் இறந்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 10 நாட்களில் மீன்பிடி ஊழியர்கள் உதவியுடன், 10,000 கிலோ 'ஜிலேபி' மீனை பிடித்து, சேக்காடு குப்பை கிடங்கு அருகில், பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு வருகிறது.
நோய் தொற்று பரவாமல் இருக்க, ஏரியைச் சுற்றி 'பிளீச்சிங்' பவுடர் தெளித்து, சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'காலநிலை மாற்றம், ஏரி நீரில் அமிலம், காரத்தன்மை சமமான அளவில் இல்லாதது, நீரின் அளவைவிட மீன்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பு ஆகிய காரணிகளால் மீன் இறந்திருக்கலாம்' என்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், 'ஏரியில் மீன் சிறியதாக இருந்ததால், வலை வைத்து பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் மின்வெட்டு ஏற்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காத நேரத்தில், ஏரியில் கழிவுநீர் பாய்ந்து மீன் இறந்திருக்கலாம். மீன் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.