/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேக்கம் பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேக்கம்
பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேக்கம்
பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேக்கம்
பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜூலை 12, 2024 02:20 AM

பொன்னேரி:பொன்னேரியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இரவு முழுதும் 8 செ.மீ., மழை பொழிவு இருந்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பொன்னேரி திருவாயற்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர், மோட்டார் உதவியுடன் வெளியேற்றப்பட்டது.
பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் உள்ள கிளை சிறை மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகம் முன், மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
கிளை சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல முடியாமல் வழக்கறிஞர்கள், போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல் தாலுகா அலுவலக சாலை புதுப்பிக்கப்பட்ட நிலையில், சாலையோரங்கள் தாழ்வாக இருப்பதால், அங்கும் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் நீதிமன்றங்கள், சார் - பதிவாளர் அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம் வருபவர்கள், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
கிளைச்சிறை மற்றும் நீதிமன்றம் வளாகம் முன் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், தாலுகா அலுவலக சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களை சமன்படுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
பேரூராட்சி அலுவலகம் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியது. இதேபோல், போலீஸ் நிலைய பின்புறத்திலும் மழைநீர் தேங்கியது.
பஜார் பகுதியில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் வழியை அடைத்து மணல் கொட்டப்பட்டு இருப்பதால், சாலையில் மழைநீர் தேங்கியது. மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூ விவசாயிகள் கவலை
திருத்தணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மதியம் வரை தொடர்ந்து துாறல் மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பூ பயிரிட்ட விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக, திருத்தணி அடுத்த தும்பிக்குளம், தாழவேடு, பட்டாபிராமபுரம், விநாயகபுரம், வேலஞ்சேரி, கோபாலபுரம் ஆகிய கிராமங்களில் அதிகளவில் பூ பயிரிட்ட விவசாயிகள், தொடர் மழையால் பூ பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
இதனால் செடியிலேயே பூக்கள் அழுகி விடுகின்றன. விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, பூ பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.