ADDED : ஜூன் 28, 2024 02:55 AM

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.
இப்பகுதி வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி தொழிற்சாலை பேருந்து கனரக வாகனம் என தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி பயன்பாட்டிலிருந்து பயணியர் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
இதையடுத்து அரசு பள்ளி அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பீல் ஒன்றியக்குழு கவுன்சிலர் நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வந்தது.
தற்போது நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
இதேபோல் இந்த நெடுஞ்சாலையில் கீழ்நல்லாத்துார் பகுதியில் உள்ள ஐந்து லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை பயணியர் நலன்கருதி விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பில்லாத நிழற்குடை
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. பாலாபுரம், கதனநகரம், மகன்காளிகாபுரம், தாமனேரி, ஜனகராஜகுப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு, மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை மற்றும் பிரசவம் உள்ளிட்டவற்றுக்காக தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பாலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரெ முச்சந்தியில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.
மருத்துவமனைக்கு வரும் பகுதிவாசிகள் இங்குள்ள நிழற்குடையில் காத்திருந்து பயணிக்கின்றனர். இந்த நிழற்குடை நீண்டகாலமாக பராமரிக்கப்படாததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிழற்குடையை அகற்றி விட்டு மேலும், இருக்கை, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதிய நிழற்குடையை கட்ட வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாழடைந்த நிழற்குடை
கனகம்மாசத்திரம் - தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து பரேஸ்புரம் கிராமம் உள்ளது.
இப்பகுதி மக்கள் அரக்கோணம், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டும், சிமென்ட் பூச்சு உதிர்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. ஆகையால், இந்த நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.
மேலும் வெயில், மழைக்கு ஒதுங்ககூட பயன்படாத நிழற்குடையாக மாறியுள்ளது. எனவே இந்த நிழற்குடையை அகற்றவும், புதிதாக நிழற்குடையை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் குழு-