ADDED : ஜூன் 12, 2024 02:27 AM

திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சோளீஸ்வரர் கோவில் ஆற்காடுகுப்பம் கிராமத்தில் உள்ளது.
இக்கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த, சிலர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் முருகன் கோவில் நிர்வாகம் ஆற்காடுகுப்பம் சோளீஸ்வரர் கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சர்வே செய்த போது, 9 வீடுகள் ஆக்கிரமித்து கட்டியுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் இணை ஆணையர் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு செய்த வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, 15 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும்.
வீடுகள் காலி செய்ய தவறினால், சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள நபர்கள் திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருவதாகவும், எங்களின் ஏழ்மை நிலை கருதி கோவில் நிர்வாகம் அந்த இடத்தில் வாடகைக்கு இருக்க அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.