/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போதை சந்தையாகும் அம்பத்துார் கோட்டை விடும் ‛உளவுத்துறை' போதை சந்தையாகும் அம்பத்துார் கோட்டை விடும் ‛உளவுத்துறை'
போதை சந்தையாகும் அம்பத்துார் கோட்டை விடும் ‛உளவுத்துறை'
போதை சந்தையாகும் அம்பத்துார் கோட்டை விடும் ‛உளவுத்துறை'
போதை சந்தையாகும் அம்பத்துார் கோட்டை விடும் ‛உளவுத்துறை'
ADDED : ஜூன் 01, 2024 06:08 AM

சென்னை: தனிப்படை போலீசாரிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் சிக்கினாலும், சிக்காமல் விற்பனையாகும் போதை பொருட்களால், அம்பத்துார் போதை சந்தையாகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை, அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனியில், அடிக்கடி திருட்டு, கோஷ்டி மோதல்கள் நடக்கிறது. அதில், சில புகார்கள் மட்டுமே, போலீஸ் நிலையத்திற்கு வருகிறது. மற்றவை ஏதாவது ஒரு வகை மிரட்டலில், புகார் செய்யப்படுவதில்லை.
அம்பத்துார் மற்றும் தொழிற்பேட்டை சுற்றுவட்டாரங்கள், போதை பொருள் விற்பனை சந்தையாக மாறி விட்டதுதான் இதற்கு காரணம். இந்த நிலையில், சமீபத்தில் தனிப்படை போலீசாரிடம், சந்தேகத்திற்கிடமாக ஒரு சிறுவன் உள்ளிட்ட சிலர் சிக்கினர். அவர்களை சோதித்த போது, ‛நைட்ரோவிட்' என்ற வலி நிவாரணிக்கான மாத்திரைகள் சிக்கியது.
அவர்களிடம் இருந்து, 1,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை விலை மதிப்பு 2 லட்சம் ரூபாய். அவற்றை, தனியார் விடுதியில் தங்குவோர், வடமாநில தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்களிடம் விற்பதும் தெரியவந்தது.
அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில், பள்ளி, கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட, சிறுவர் மற்றும் வாலிபர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த போதையால், அம்பத்துார், கொரட்டூர், தொழிற்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரங்களில், அடிக்கடி கோஷ்டி மோதல்கள் நடக்கின்றன. அதனால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஓரிரு சம்பவங்கள் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. மற்றவை அரசியல்வாதிகள், வக்கீல்களின் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரசம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த, 17ம் தேதி, அம்பத்துார் மார்க்கெட்டில், ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த, 1,140 ‛நைட்ரோவிட்' என்ற, போதை மாத்திரைகள் சிக்கின. அவற்றை விற்பனை செய்ய முயன்ற, மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் உட்பட இருவர் கைதாகினர்.
அம்பத்துார் அடுத்த அயப்பாக்கத்தில், கஞ்சா விற்ற, பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து, 10 கிலோ கஞ்சாவை, மதுவிலக்கு போலீசார் கைப்பற்றினர்.
அதே போல, 19ம் தேதி சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார், ஆவடி அடுத்த வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், ஆந்திராவில் இருந்து இரண்டு கார்களில் கடத்தி வரப்பட்ட, 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.
போதை பொருள் குறைந்த எண்ணிக்கையில் சிக்கினாலும், கடத்தல் மற்றும் சந்தையில் அதிக அளவில், விற்பனையாவது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.