Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயில் சேவை குறைபாடால் பயணியர்... தவிப்பு! l : கும்மிடி மார்க்கத்தில் தினமும் அவலம்

ரயில் சேவை குறைபாடால் பயணியர்... தவிப்பு! l : கும்மிடி மார்க்கத்தில் தினமும் அவலம்

ரயில் சேவை குறைபாடால் பயணியர்... தவிப்பு! l : கும்மிடி மார்க்கத்தில் தினமும் அவலம்

ரயில் சேவை குறைபாடால் பயணியர்... தவிப்பு! l : கும்மிடி மார்க்கத்தில் தினமும் அவலம்

ADDED : ஜூன் 15, 2024 10:50 PM


Google News
பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில்மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தினமும் காலதாமதத்துடன் இயக்கப்படுவதால், பயணியர் உரிய நேரத்தில் தத்தம் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

சென்னை சென்டரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 94 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில் வழித்தடத்தில், பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் என, 16 ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த வழித்தடத்தில், தினமும், 3 லட்சம் பயணியர் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர். மொத்தமுள்ள, 47 கி.மீ., தொலைவு துாரத்தை கடக்க, ஒரு மணிநேரம், 30 நிமிடங்கள் ஆகும் என அட்டவணையில் குறிப்பிடப்படுகிறது.

சிரமம்


இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் தினமும், 30 - 60 நிமிடங்கள் காலதாமத்துடனே இயக்கப்படுகின்றன. வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

உயர்க்கல்வி படிக்க செல்லும் மாணவர்கள் தாமதத்துடன் கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டிய

நிலை ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள பகுதிகளில் இருந்து சென்னை செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், பயணியர் புறநகர் ரயில் சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.

ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுவதால், அவ்வப்போது பயணியர் மறியல் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், புறநகர் ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லாததால் பயணியரின் இன்னல்கள் தொடர்கிறது.

ஐந்து ஆண்டுகள்


இந்த மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி வரை, புறநகர், விரைவு ரயில்கள் தனித்தனிப்பாதையில் பயணிப்பதற்காக நான்கு வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பணிகள் முழுமை பெறாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதனால், வடமாநிலங்களுக்கு சென்று வரும் விரைவு ரயில்கள் சென்று வருவதற்கு ஏற்ப, பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ஆகிய ரயில் நிலையங்களில் புறநகர் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால் மேலும் சிலநிமிடங்கள் புறநகர் ரயில் பயணியர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நள்ளிரவு, 12:15மணிக்கு புறநகர் ரயில் சேவை இருந்தது. கடந்த, 2020ல் கொரோனா காலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

நள்ளிரவு ரயில்


அதன்பின் படிப்படியாக மற்ற புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட நள்ளிரவு ரயில் மட்டும் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.

இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அரசு பேருந்து பணியாளர்கள் பகல் - இரவு பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்கள் பணிமுடிந்து ரயில் நிலையங்களில் உறங்கி, அதிகாலை, 4:20 மணிக்கு புறப்படும் புறநகர் ரயிலில் வீடு திரும்புகின்றனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் புறநகர் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு இல்லாததது, சிசிடிவி., கேமராக்கள் பொருத்தாதது, கழிப்பறைகள் மூடிக்கிடப்பது என சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மேலும் பல சேவை குறைபாடுகள் உள்ளதால் தெற்கு ரயில்வே இந்த மார்க்கத்தினை புறக்கணிப்பதாக பயணியர் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் கவனிப்பரா?


இது குறித்து பயணியர் கூறியதாவது:புறநகர் ரயில்களை மட்டுமே நம்பி உள்ள எங்களை போன்ற பயணியர் தினந்தோறும் வேதனையுடன் பயணிக்கிறோம். நீண்ட நேர பயணத்தால் நீரிழிவு நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தினமும், சென்று வருவதற்கு நான்கு மணிநேரம் செலவிடும் நிலை உள்ளது. மற்ற வழித்தடங்களில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எங்கள் வழித்தடத்தில் அதற்கும் வழியில்லை. இருக்கும் ரயில்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகளும் பயணியருக்கு முறையான பதில் அளிப்பதில்லை. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சேவை குறைபாடுகளில் இருந்து எப்போது விமோசனம் கிடைக்கும் என தெரியவில்லை. பயணியரின் இன்னல்கள் குறித்து ரயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், திருவொற்றியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் திருவள்ளூர் தொகுதி எம்.பி., ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



2 மின்சார ரயில்கள் ரத்து


ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, திருவள்ளூர் தடத்தில் இரண்டு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவள்ளூர் ரயில்வே யார்டில் வரும் 19, 20ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 4;30 மணி, திருவள்ளூர் - சென்ட்ரல் அதிகாலை 3:50 மணி ரயில்கள் வரும் 19, 20ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us