Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஒன்றியம், கோவில் நிர்வாகத்திற்கிடையே பனிப்போர்

பெரியபாளையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஒன்றியம், கோவில் நிர்வாகத்திற்கிடையே பனிப்போர்

பெரியபாளையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஒன்றியம், கோவில் நிர்வாகத்திற்கிடையே பனிப்போர்

பெரியபாளையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஒன்றியம், கோவில் நிர்வாகத்திற்கிடையே பனிப்போர்

ADDED : ஜூலை 08, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
ஊத்துக்கோட்டை: சாலை மற்றும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு, குண்டும், குழியுமான சாலை உள்ளிட்ட பிரச்சனைகளால் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்படும் செலவுகள் குறித்து கோவில் நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் இடையே பனிப்போர் நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீபவானியம்மன் கோவில். தனியார் வசம் உள்ள இந்த பழமை வாய்ந்த கோவில் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சென்று அம்மனை தரிசனம் செய்வர். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் கோலாகலமாக நடைபெறும்.

ஆடி மாத விழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இங்கு உள்ளதா என்றால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

பக்தர்கள் வந்து தங்குவதற்கு அறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏதுமின்றி கடும் அவதிப்படுகின்றனர். சாலை, நடைபாதை ஆகியவை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நேற்று பாலத்தில், 108 ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி, அரை மணி நேரத்திற்கு பின் சென்றது குறிப்பிடத்தக்கது.

செலவு எங்களுக்கா?


ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத விழாவிற்கு முன் கோவில் நிர்வாகம், அரசு அலுவலர்கள் பங்கேற்று பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்துவர். இதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முடிவெடுப்பர்.

ஆனால் கள நிலவரத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கிறதா என்றால் இதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கோவில் அமைந்துள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது. ஆனால் பக்தர்கள் பயன்படுத்தும் இடங்கள் அனைத்து எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமானது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும், 14 வாரங்கள் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, குப்பை அள்ளுவது, பிளீச்சிங் பவுடர், போலீஸ், தீயணைப்பு, மருத்துவ முகாம் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆகும் செலவுகள் ஒன்றிய நிர்வாகம் மூலம் செய்யப்படுகிறது.

இந்த பணம் ஒன்றியத்தில் உள்ள, 53 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும் பணம் என, ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் எடுத்துரைத்தனர்.

முடி காணிக்கை, வேப்பிலை ஆடை அணிந்து செல்லுதல், உண்டியல் உள்ளிட்ட வரவுகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்திற்கு செல்கிறது.

இனி ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் செலவுகளை கணிசமான தொகையை கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து சீரான போக்குவரத்து மற்றும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., -கே.கணேஷ்குமார் கூறியதாவது:

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் ஒவ்வொரு மாதமும், ஒரு லட்சம் பக்தர்கள் வருவர். இங்கு சாலை, நடைபாதைகள் ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளது. வருவாய்த் துறையினர் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை மூலம் அகற்றினால் மட்டுமே தீர்வு ஏற்படும்.

இதில் சாலையை சீரமைப்பதில் தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறை இடையே போட்டி உள்ளது. ஆடி மாத விழாவிற்கு இன்னும், 10 நாட்கள் உள்ளன. வருவாய், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us