Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ராயப்பேட்டையில் 'பவானி' இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்

ராயப்பேட்டையில் 'பவானி' இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்

ராயப்பேட்டையில் 'பவானி' இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்

ராயப்பேட்டையில் 'பவானி' இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்

ADDED : ஜூலை 22, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி: தமிழக அரசின் நிதி மற்றும் பல்வேறு நிதி ஆதாரங்கள் வாயிலாக, சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி நடந்து வருகிறது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சார்பில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான உயர்நிலை ஆய்வு கூட்டம், சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திட்ட அறிக்கை


அப்போது, இரண்டாம் திட்டத்தின் மூன்று வழித்தடங்களில், ஒவ்வொரு காரிடரிலும் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

விரிவான திட்ட அறிக்கைகள், சாத்தியக்கூறு அறிக்கைகள், வழித்தட வரைபடங்கள் உள்ளிட்டவற்றை காண்பித்து, ஒருங்கிணைந்த பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் அம்சங்களை அதிகாரிகள் விளக்கினர்.

தொடர்ந்து, மாதவரம்- சிறுசேரி தடத்தில், ராயப்பேட்டையில் 21.5 மீட்டர் ஆழத்தில் நடந்துவரும் பணிகளை, மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் சென்று, உதயநிதி ஆய்வு செய்தார்.

பின், ராயப்பேட்டை - ராதாகிருஷ்ணன் சாலை இடையே, வழித்தடங்களை உருவாக்குவதற்காக வரவழைக்கப்பட்டுள்ள சுரங்கம் தோண்டும் 'பவானி' என்ற இயந்திரத்தின் பணியை, உதயநிதி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, ஆலப்பாக்கத்தில் 4 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படும் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். பின், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

பூந்தமல்லியில் 82 சதவீத பணிகள் முடிந்துள்ள பணிமனையில், ஆட்கள் இல்லாமல் ரயில் எப்படி இயக்கப்படும், பணிகள் எப்போது நிறைவடையும், பூந்தமல்லியில் இருந்து பரந்துார் வரை எதிர்கால மெட்ரோ வழித்தட பணிகள் குறித்த விபரங்களை, அமைச்சர் உதயநிதி கேட்டார். அதற்கு, படம் மற்றும் வீடியோ காட்சிகளை திரையிட்டு, மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து, அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

சோதனை ஓட்டம்


மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் டி.அர்ச்சுனன் கூறியதாவது:

பூந்தமல்லியில் 40 ஏக்கரில் அமைக்கப்படும் பணிமனை கட்டுமான பணி 82 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. வரும் ஆக., - செப்., மாதங்களில், பூந்தமல்லிக்கு ஆறு பெட்டிகள் உடைய மெட்ரோ ரயில் எடுத்து வரப்படும்.

இந்த ரயிலை பணிமனையில் சோதனை செய்து, 2025 நவம்பரில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை உயர்மட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடக்கும். மெட்ரோ ரயில் பணிக்காக நிலம் கையப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us