/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பட்டாபிராம் சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை தேவை பட்டாபிராம் சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை தேவை
பட்டாபிராம் சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை தேவை
பட்டாபிராம் சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை தேவை
பட்டாபிராம் சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 04, 2024 05:44 AM

ஆவடி : ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராமில், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
பட்டாபிராம் வடக்கு பகுதியில் காமராஜபுரம், எம்.ஜி.ரோடு, சி.டி.எச்., சாலை, சத்திரம், தேவராஜபுரம், பி.ஓ.டி., ரோடு, கக்கன்ஜி நகர் பகுதிகள் உள்ளன.
தெற்கு பகுதியில் வள்ளலார் நகர், ஸ்டேஷன் ரோடு, மாங்குளம், தண்டரை, பள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
கடந்த 2002க்கு முன், தெற்கு பகுதியில் உள்ள மக்கள், தண்டரை மார்க்கெட் செல்ல, பட்டாபிராம் ரயில்வே தண்டவாளத்தை பயன்படுத்தினர். இதனால், பல விபத்துகள் நடந்ததால், 2002ல் பட்டாபிராம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் விதமாக மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கடந்த 2010ல், மத்திய -- மாநில அரசு நிதியில், மேற்கூறிய இரு பகுதிகளை இணைக்கும் விதமாக பட்டாபிராம் -- தண்டரை மேம்பாலம் கட்டி பயன்பாட்டுக்கு வந்தது.
தண்டரை பகுதியில் மார்க்கெட் வசதி இல்லாததால், சாலையோர வியாபாரிகள், மேம்பாலத்தை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துக் கொண்டனர்.
ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளாததால், மேம்பாலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டது.
தண்டரை மீன் மார்க்கெட் மற்றும் வடக்கு பஜார் வரும் மக்கள், வாகனங்கள் நிறுத்த வழி இல்லாமல், அணுகு சாலையில் வாகனங்களை நிறுத்தினர்.
இதனால், அணுகு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். வாகன நெரிசலால் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளும் செல்ல வழியில்லாமல் சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த அணுகு சாலையில் நடந்து செல்ல முடியாதபடி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
மற்ற நாட்களில், வேலைக்கு செல்வோர் அணுகு சாலையில் அத்துமீறி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், தண்டரை மீன் மார்க்கெட் அமைந்துள்ள அணுகு சாலை, கூட்ட நெரிசலுடன் காட்சி அளிக்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேம்பாலத்தின் கீழ் காய்கறி கடைகள், துணிக்கடை, பூஜை பொருட்கள் கடை, மாலை கடை, டிபன் கடை, பங்க் கடை, வளையல் கடை, பூக்கடை என, 20க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.
அங்கு எத்தனை கடைகள் உள்ளன என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சாலையோர வியாபாரிகள் குறித்த தகவல்களையும், அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வியாபாரிகள், இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
எனவே, ஆவடி மாநகராட்சி கமிஷனர் இதில் தலையிட்டு, கடைகளை கணக்கெடுத்து, பயன்படாமல் உள்ள கடைகளை அகற்றி, பொதுமக்கள் பயன்படுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை முழுக்க மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி,'பார்க்கிங்' இடமாக தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இங்கு தான், சாலையோர கடைகள் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
இதனால், பொதுமக்கள் அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
எனவே, அங்குள்ள சாலையோர கடைகளை முறைப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், பட்டாபிராமில் புதிதாக மார்க்கெட் அமைக்க ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.