ADDED : ஜூலை 31, 2024 03:08 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், 28ம் தேதி ஆடிப்பரணி, 29ம் தேதி ஆடிக்கிருத்திகையும் தெப்பத்திருவிழா நடந்தது. மூன்று நாள் தெப்பத்திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இதில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்தனர். பொதுவழியில் இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்பத்தில் உற்சவர் ஐந்து முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், அமைச்சர் காந்தி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கோட்டாட்சியர் தீபா, திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இன்று மாலை மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவுடன் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
ஆடிக்கிருத்திகைக்கு வந்திருந்த பக்தர்கள் மலர், மயில் காவடி ஆகியவை தான் அதிகளவில் கொண்டு வந்தனர்.
மேலும் மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில் காவடிகளுடன் வந்த பக்தர்கள் குளத்தில் புனித நீராடி, வீடுகளில் இருந்து கொண்டு வந்த மலர் மாலைகளை கழற்றி விட்டு, புதிய மலர் மாலைகளுடன் காவடிகளுக்கு பூஜை போட்டு, மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
அந்த வகையில், தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர் என, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
1,000 டன் குப்பை அகற்றம்
மேலும், மலைக்கோவிலில் காவடி மண்டபத்தில் நேர்த்தி கடனை செலுத்திய பின் பக்தர்கள், காவடிகளில் இருந்த மலர் மாலைகளை கழற்றி வீசினர். இதனால், வளாகம் முழுதும் குப்பையாக காட்சியளித்தது.
இந்த மாலைகளை கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்ட, பத்மாவதி ஒப்பந்த ஊழியர்கள் 400 பேர், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் 500 பேர் என, மொத்தம் 900 பேர் நேற்று அகற்றினர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும், 1,000 டன் பூமாலை மற்றும் குப்பை அகற்றப்பட்டு, பிளிச்சிங் பவுடர் துாவப்பட்டது.
அதேபோல், ஆடிப்பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. அந்த வகையில் சேர்ந்த, வாழை இலை, தட்டுகள் என, 75 டன் குப்பையும் நகராட்சி, கோவில் ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.