Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு; குண்டாறு அணை நிரம்பியது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு; குண்டாறு அணை நிரம்பியது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு; குண்டாறு அணை நிரம்பியது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு; குண்டாறு அணை நிரம்பியது

ADDED : மே 31, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி : திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை நிரம்பியது.

இம்மாவட்டங்களில் இந்தாண்டு ஜூன் மாதம் துவங்குவதற்கு முன்னவே தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்க்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 122 மி.மீ., காக்காச்சியில் 102 மி.மீ., மாஞ்சோலையில் 80 மி.மீ., மழை பெய்துள்ளது.

பாபநாசம் அணைப்பகுதியில் 64 மி.மீ., மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4898 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 113.50 அடியை எட்டியது.

156 அடி உயரமுள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 143 அடியை எட்டியது. அணைப்பகுதியில் 39 மி.மீ., மழை பெய்தது.

118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 90 அடியை எட்டியது. அணைப்பகுதியில் 25 மி.மீ.,மழையளவு பெய்தது.

52 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 42 அடியை எட்டியது. 59 மி.மீ., மழை பெய்தது.

22 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 13 அடியாக இருந்தது. 49 அடி உயரமுள்ள வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 11 அடியே இருந்தது. அங்கு மழை இல்லை.

தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரமுள்ள கடனா நதி அணை நீர்மட்டம் நேற்று காலை 62 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 39 மி.மீ., மழை பெய்தது. 84 அடி உயரமுள்ள ராமநதி அணையில் நேற்று காலை நீர்மட்டம் 72 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 40 மி.மீ., மழை பெய்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணைக்கட்டில் நேற்று காலை நீர்மட்டம் 59 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 55 மி.மீ., மழை பெய்தது.

132 அடி உயரமுள்ள அடவி நயினார் அணை நீர்மட்டம் 93 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 56 மி.மீ.,மழை பெய்தது. செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டியதால் அணையில் இருந்து நீர் வெளியேறியது. அணைப்பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வழக்கமாக ஜூன் முதல் தேதியில் இருந்து தான் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கியதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன.

கார் பருவ நெல் சாகுபடிக்கு போதுமான நீர் உள்ளதாக விவசாயிகள் திருப்தி தெரிவித்தனர். ஜுன் முதல் தேதி பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us