/உள்ளூர் செய்திகள்/தேனி/ரேஷன் பொருட்கள் எடுக்க நீண்ட துாரம் செல்வதால்.. நிதி வீணாகிறது : நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டமடையும் நிலைரேஷன் பொருட்கள் எடுக்க நீண்ட துாரம் செல்வதால்.. நிதி வீணாகிறது : நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டமடையும் நிலை
ரேஷன் பொருட்கள் எடுக்க நீண்ட துாரம் செல்வதால்.. நிதி வீணாகிறது : நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டமடையும் நிலை
ரேஷன் பொருட்கள் எடுக்க நீண்ட துாரம் செல்வதால்.. நிதி வீணாகிறது : நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டமடையும் நிலை
ரேஷன் பொருட்கள் எடுக்க நீண்ட துாரம் செல்வதால்.. நிதி வீணாகிறது : நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டமடையும் நிலை
ADDED : செப் 04, 2025 04:51 AM

கடந்தாண்டு மத்திய அரசு தேசிய அளவில் 10 இடங்களில் தலா ரூ. 2 கோடி மதிப்பில் தானியங்கள் சேமிக்கும் வகையில் குடோன்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்தது. அதில் தேனி மாவட்டமும் தேர்வானது.
போடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டு சில்லமரத்துபட்டியில் அந்த குடோன் அமைந்தது. அந்த குடோன் விவசாயிகள் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விவசாயிகள் முன்வராததால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 160 ரேஷன் கடைகளுக்கு உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப குடோனில் இருப்பு வைத்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பினர்.
சிலமரத்துப்பட்டி குடோனை வாடகைக்கு எடுத்ததால் அங்கிருந்து 57 கடைகளுக்கு ரேஷன் பொருட்களை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அனுப்பி வருகின்றனர்.
இதனால் சின்னமனுார், உத்தமபாளையத்தில் உள்ள கூட்டுறவுச்சங்கங்கள் கூடுதல் நிதி செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதுபற்றி கூட்டுறவு சங்கத்தினர் கூறுகையில், சில்லமரத்துப்பட்டி குடோனில் இருந்து கன்னிசேர்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம், அய்யம்பட்டி, அப்பிபட்டி, புலிகுத்தி, ஓடைபட்டி, கன்னியம்பட்டி, முத்துலாபுரம்,காமாட்சிபுரம், சின்னமனுார், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்து வருகிறோம்.
முன்பு உத்தமபாளையம் குடோனில் இருந்து பொருட்கள் கொண்டு வந்த போது டீசல் செலவு குறைவாக இருந்தது. குறைந்த நேரத்தில் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு சென்றன.
ஆனால், தற்போது, உத்தமபாளையத்தில் இருந்து சில்லமரத்துப்பட்டி சென்று வர கூடுதலாக 30 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொருட்கள் கொண்டு வருவதற்கான டீசல் செலவிற்கு ஒவ்வொரு சங்கமும் மாதந்தோறும் கூடுதலாக நிதி செலவிட வேண்டியுள்ளது. இதனால் ஒரு சங்கத்திற்கு ஒரு லோடு இறக்க கூடுதலாக ரூ.3 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது.
அனைத்து சங்கங்களுக்கும் மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வீண் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இதனால் நலிவடைந்த சங்கங்கள் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
மீண்டும் உத்தமபாளையம் குடோனில் இருந்து பொருட்கள் நகர்வு செய்ய நுகர்பொருள் வாணிபகழகத்தினர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.