Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கண்மாயை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி கண்டு கொள்ளாத நீர்வளத்துறை

கண்மாயை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி கண்டு கொள்ளாத நீர்வளத்துறை

கண்மாயை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி கண்டு கொள்ளாத நீர்வளத்துறை

கண்மாயை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி கண்டு கொள்ளாத நீர்வளத்துறை

ADDED : செப் 11, 2025 05:39 AM


Google News
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பாப்பியம்பட்டி கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், இரு போகம் நெல் சாகுபடி, ஒரு போகமாக குறைந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இக்கண்மாய் பாசன விவசாயிகள் கண்மாயை துார்வாரி, இருபோக நெல் சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

இக்கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கண்மாய்க்கு சோத்துப்பாறையில் இருந்து வரும் நீரும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழை நீர் சேகரம் ஆவதால் கண்மாய் நிரம்பும். இக்கண்மாய் நீரை நம்பி 600 ஏக்கரில் நேரடியாகவும், பல நுாறு ஏக்கரில் மறைமுகமாக வேளாண் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் கண்மாய் சிக்கி பரப்பளவு குறைந்து வருகிறது. கண்மாய் நீர் பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து நெல் அறுவடை செய்கின்றனர். மறுபுறம் கரும்பு, மா மரங்கள் வளர்த்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை நீர் வளத்துறையினர் பாரபட்சம் இன்றி, அகற்றாவிட்டால் பாப்பியம்பட்டி கண்மாய் காலப்போக்கில் காணாமல் போகும் நிலை உருவாகும். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும் என பாப்பியம்பட்டி ஆயக்கட்டுதாரர்கள், தென்கரை பேரூராட்சியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

துார்வாரப்படுமா சுரேஷ்கண்ணன், விவ சாயி: கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயத்தின் எதிர்காலம் பாழ்படும் நிலை உள்ளது. இக்கண்மாய் நிரம்பினால் பெரியகுளம் முதல் கைலாசபட்டி, லட்சுமிபுரம் வரை நுாற்றுக்கணக்கான கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். ஆக்கிரமிப்பால் கண்மாயில் நீர் தேங்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்காலில் களைச்செடிகள் வளர்ந்து இடையூறாக உள்ளது. மடைகள் பராமரிக்கப்படவே இல்லை. இதே நிலை நீடித்தால், தென்கரை பேரூராட்சி குடியிருப்பு, விவசாய நிலம் உள்ளிட்ட ஆழ்துளை குழாய்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது. கண்மாய் துார்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. துார்வார வேண்டும்., என்றார்.

நெல் விவசாயம் பாதிப்பு ராஜாமணி, விவசாயி: கண்மாயில் நீர் தேங்காததால் இரு போகம் நெல் விவசாயம் தற்போது ஒரு போகமாக மாறியுள்ளது. இதனால் நெல் விவசாயிகள் சோர்வடைந்து உள்ளோம். இதனால் ஒரு ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. பாப்பியம்பட்டி கண்மாயில் ஆக்கிரமிப்பு, களைச் செடிகள் அகற்றினால், அக்., நவ., பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்கினால் விவசாயம் பிழைக்கும். நீர் வளத்துறையினர் கண்மாயை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us