/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையை உடைக்க மனுதாக்கலுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த - தமிழக விவசாயிகள் முடிவு பெரியாறு அணையை உடைக்க மனுதாக்கலுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த - தமிழக விவசாயிகள் முடிவு
பெரியாறு அணையை உடைக்க மனுதாக்கலுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த - தமிழக விவசாயிகள் முடிவு
பெரியாறு அணையை உடைக்க மனுதாக்கலுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த - தமிழக விவசாயிகள் முடிவு
பெரியாறு அணையை உடைக்க மனுதாக்கலுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த - தமிழக விவசாயிகள் முடிவு
ADDED : செப் 13, 2025 02:15 AM

கூடலுார்:பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் 'சேவ் கேரளா பிரிகேட்' அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரசூல்ஜோய் மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணையில் 142 அடிநீர் தேக்கலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் முழுக் கொள்ளளவான 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 2014ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி தற்போது நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் உச்ச நீதிமன்றதீர்ப்புக்கு எதிராக நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுப்பதற்கான முயற்சியில் கேரளா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது அணை உடைந்து விடும் என கேரள மக்களை அச்சுறுத்தும் வேலையையும் தொடர்ந்து செய்து வருகிறது.
கேரள வழக்கறிஞர் ரசூல் ஜோய் 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பை துவக்கி அதன் மூலம் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அணை உடைவது போன்ற கிராபிக் காட்சிகளை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரச்னையை பெரிது படுத்தும் வேலையும் நடந்துவருகிறது.
மேலும் அணை உடைந்தால் லட்சக்கணக்கான கேரள மக்கள் பலியாவார்கள் என்ற அச்சத்தையும் அம் மக்களிடம் புகுத்தி பிரச்னையை பெரிதாக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அணையை உடைக்க வேண்டும் என தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யதுள்ளார்.
இதற்காக அணையின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சர்வதேச நிறுவனத்தை வைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அணை பாதுகாப்பானது என்ற அறிக்கை தவறானது என்றும், தங்களிடம் அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அணையை முழுமையாக ஆய்வு செய்த பின் அணை பலமாக உள்ளதால் 142 அடிநீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், கேரள வழக்கறிஞர் அதற்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்துள்ளதற்கு தமிழக விவசாய தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
போராட்டம் நடத்துவோம் ரஞ்சித்குமார், ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர், கம்பம்: ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணைக்கு எதிரான தொடர் அவதுாறு பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோயின் 'சேவ் கேரளா பிரிகேட்' அமைப்பை தடை செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் வழக்கறிஞர் குறித்து கேரள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றார்.
பிரச்னையை துாண்டும் ராமராஜ் , 18ம் கால்வாய் விவசாய சங்க தலைவர், கோம்பை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் மத்திய அணை கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு அணையை ஆய்வு செய்து அணை பலமாகவே உள்ளது என அறிக்கை கொடுத்தபடி உள்ளது. இருந்த போதிலும் இரு மாநில மக்களிடையே பிரச்னையை துாண்டும் வகையில் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தேவையற்றது என்றார்.