Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள்; மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது

ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள்; மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது

ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள்; மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது

ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள்; மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது

ADDED : செப் 02, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் தினந்தோறும் மெயின் பஜாரில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப் பகுதியில் கூடலழகிய பெருமாள் கோயிலுக்கு தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் உள்ளன. காந்தி கிராமம், கரிமேட்டுப்பட்டி, சுக்காங்கல்பட்டி, ராஜீவ் காந்தி நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர். காலனி, கன்னிகாளிபுரம், கருணாநிதி காலனி, பழைய பஸ் ஸ்டாண்ட் என மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலையில் இருந்து இப்பகுதிகளுக்குச் செல்லும் இணைப்பு ரோடு லாரி, பஸ் செல்லும் வகையில் அகலமாக இருந்தது. குறுக்குத் தெருவிலும் மினி லாரி, ஆம்புலன்ஸ், வேன் என அதிகம் சென்று வந்தது.

தற்போது அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கு முன் படிகள், கடைகள் என கட்டி ஆக்கிரமித்துள்ளனர். பல தெருக்களில் டூவீலர்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மெயின் ரோடு மற்றும் மெயின் பஜார் தவிர மற்ற இடங்களுக்கு அவசரத் தேவைக்காக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரை செல்லும் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்களும் கடந்து செல்ல முடிவதில்லை.

மூன்றாம் நிலை நகராட்சியாக 2004ல் தரம் உயர்த்தப்பட்ட பின் இதுவரை தெருக்களில் அளவீடு செய்யவில்லை. பல ஆண்டுகளாக நகர கட்டமைப்பு ஆய்வாளர் இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது நகராட்சி பொறியாளர், நகர கட்டமைப்பு அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பாரபட்சம் இன்றி அனைத்து தெருக்களிலும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் மெயின் பஜாரில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us