ADDED : செப் 22, 2025 03:18 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கொத்தவரங்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில், விலை குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, பாலக்கோம்பை, ராயவேலுார், சித்தார்பட்டி, சேவா நிலையம் உட்பட பல கிராமங்களில் காய்கறிகள், பூக்கள் சாகுபடி உள்ளது. தற்போது விவசாயிகள் பலர் கொத்தவரங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
விளைச்சல் அதிகரித்த நிலையில், எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
கன்னியப்பபிள்ளைபட்டி விவசாயி முருகேசன் கூறியதாவது:
கொத்தவரங்காய் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய முடியும். குறைந்த பரப்பில் அதிக விளைச்சல் கிடைக்கும். ரசாயன உரங்கள் மருந்துகள் அதிகம் தேவையில்லை.
நடவு செய்த 45 நாளில் தொடர்ந்து காய்கள் பறிக்க முடியும்.
ஆண்டிபட்டி பகுதியில் இருந்து தினமும் 3 டன் அளவிலான கொத்தவரங்காய் விற்பனைக்கு செல்கிறது. இரு வாரங்களுக்கு முன் கிலோ ரூ.30 முதல் 40 வரை இருந்த காய் தற்போது கிலோ ரூ.15 முதல் 20 வரை உள்ளது. காய் பறிப்புக்கு கூலிச்செலவு கூடுதலாகிறது. தற்போது விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.